கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மூன்று மாடிக் கடைவீடு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (மே 12) அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் வெளிநாட்டு ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட கடைவீட்டிலிருந்து 11 பேர் மீட்கப்பட்டனர்.
கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு அதிகாலை 2.13 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தித்திவாங்சா, புடு, செந்தூல், ஸ்ரீ ஹர்த்தாமாஸ் தீயணைப்புப் படை நிலையங்களின் உதவியுடன், ஜாலான் ஹாங் துவா தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மொத்தம் 45 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 2.25 மணிக்குச் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது அந்த மூன்று மாடிக் கடைவீட்டைத் தீ முழுமையாகச் சூழ்ந்திருந்ததைக் கண்டதாகத் தீயணைப்புப் படையின் செயல்பாட்டுப் பிரிவுத் தளபதியும் துணைக் கண்காணிப்பாளருமான அஸ்ருல் கைரி அபு பக்கர் தெரிவித்தார்.
“தீயணைப்புத் துறையினர் வெளிநாட்டினர் 11 பேரைக் கட்டடத்திலிருந்து மீட்டனர். இருப்பினும், ஆடவர் ஒருவர் இறந்துவிட்டதாக மலேசியச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது,” அவர் கூறினார்.
கடைவீட்டின் மூன்றாவது தளத்திலிருந்து ஆடவர் நால்வர் மீட்கப்பட்டதாகவும் கூரையில் சிக்கியிருந்த ஆண்கள் இருவரையும் பெண் ஒருவரையும் தீயணைப்புப் படையினர் ஏணியைப் பயன்படுத்திக் கீழே கொண்டுவந்ததாகவும் அவர் விவரித்தார்.
“இந்தத் தீ விபத்தில் கட்டடத்தின் தரைத் தளம் மற்றும் இரண்டாவது தளம் பாதிக்கப்பட்டன, கட்டடத்தின் ஏறத்தாழ 50 விழுக்காட்டுப் பகுதி சேதமடைந்துள்ளது,” என்று திரு அஸ்ருல் கைரி குறிப்பிட்டார்.
உயிர் தப்பிய அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டசெல்லப்பட்டதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“அதிகாலை 5.10 மணிக்குத் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு ஆகியவை குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

