ஜப்பான் நிலச்சரிவுகளில் ஒருவர் பலி

1 mins read
7f3aea37-eb61-40bc-bae6-9db528ac24bb
யாமாட்டோ நகரில் அமைந்துள்ள மிஃபுனே ஆற்றின் மேல் இருந்த மேம்பாலம் ஜூலை 3ஆம் தேதியன்று கனமழையால் இடிந்துவிழுந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானின் தென்மேற்கில் உள்ள கியூஷூ தீவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது ஒருவர் மாண்டுவிட்டார்.

பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஃபுகுவோக்கா பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க மாது ஒருவரின் வீடு நிலச்சரிவில் சிக்கியதால் அவர் உயிரிழந்ததாக ‘என்எச்கே’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சாகா பகுதியில் இரண்டு வீடுகள் நிலச்சரிவில் சேதமடைந்ததில் வீடுகளில் இருந்த மூவரைக் காணவில்லை என அச்செய்தி குறிப்பிட்டது. ஃபுகுவோக்கா, ஓயிட்டா பகுதிகளின் சில இடங்களில் கனமழைக்கான ஆக உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கியூஷூவின் வடபகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை கூடுதலாக 200 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானிய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரையில்லாத அளவு ஜப்பானில் கனமழை பெய்துகொண்டிருப்பதாக வானிலை நிலையம் குறிப்பிட்டது.

கனமழையினால் போக்குவரத்தும் ஜப்பானில் பாதிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமாவுக்கும் ஃபுகுவோக்காவுக்கும் இடையில் உள்ள ஹக்காட்டா நிலையங்களில் ஷின்கான்சென் அதிவிரைவு ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்