புத்ராஜெயா: இவ்வாண்டு இதுவரை ஏறக்குறைய ஒரு மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
“உங்களுக்கு ஞாபகம் இருந்தால், 2023ல் பிரதமர் அன்வார் இப்ராகிம் விசா விதிமுறைகளை தளர்த்துவதைப் பற்றி அறிவித்தது தெரியும். நாங்கள் அதை ஒரு வருடச் சோதனைக் காலமாக எடுத்துக்கொண்டோம்,” என்று செவ்வாய்க் கிழமையன்று (ஏப்ரல் 22) அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறினார்.
“முப்பது நாள்களிலிருந்து விசா இல்லாமல் மலேசியாவுக்குப் பயணம் செய்யும் காலத்தை 90 நாள்களுக்கு அதிகரித்துள்ளோம். இதே போன்ற வரி விலக்கு அளிக்க சீனாவையும் கேட்டுக் கொண்டோம்.
“சோதனை காலக்கட்டத்தில் சுற்றுலாத் துறையில் நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதுமட்டுமல்லாமல் நமது பொருளியலைத் தூண்டியிருக்கிறது. இதையடுத்து சீனாவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அண்மைய சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் பயணத்தின்போது விசா வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விசா விதிமுறையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரப் போவதாகவும் அவர் சொன்னார்.
சீனா சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் சுற்றுலாவுக்காக மலேசியாவுக்குள் நுழையலாம். 90 நாள்கள் விசா இல்லாமல் அவர்கள் மலேசியாவில் தங்கலாம். சீனாவும் இதே போன்று பதிலுக்குச் செய்கிறது என்று திரு சைஃபுதீன் தெரிவித்தார்.
இம்மாதம் 16ஆம் தேதி மலேசியாவும் சீனாவும் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஒத்துழைப்பு உடன்பாடு, இரு நாடுகளுக்கு இடையிலான பயணிகளுக்கு பரஸ்பர விசா விலக்கு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
தற்போது, இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மலேசியர்கள் விசா இல்லாமல் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். சீன நாட்டவர்களும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை விசா இல்லாமல் மலேசியாவுக்கு வர முடியும்.
தொடர்புடைய செய்திகள்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், சீன அதிபர் ஸி ஜின்பிங் முன்னிலையில் கையெழுத்தாகின.
மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அரசதந்திர உறவின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் விசா விலக்கு இடம்பெறுகிறது.

