பேங்காக்: மின்னிலக்கப் பணப்பை மூலம் பொதுமக்களுக்கு உதவித்தொகை வழங்குவது தாய்லாந்து அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களில் ஒன்று.
தற்போது அந்த திட்டம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் தகவல் வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகையில் ஒரு பகுதி ரொக்கமாக மக்களுக்கு வழங்கப்படும் என்று 38 வயது பேடோங்டார்ன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
“இதுகுறித்த விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, விரைவில் நாடாளுமன்றத்தில் அறிக்கை மூலம் அனைத்து தகவலும் வெளியிடப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
முதலில் 50 மில்லியன் தாய்லாந்து குடிமக்களுக்கு மின்னிலக்கப் பணப்பை மூலம் 10,000 பாட் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நிதியை மக்கள் ஆறு மாதங்களுக்குள் அவர்கள் வட்டாரத்தில் செலவு செய்துகொள்ளலாம்.
ஆனால், இப்போது அந்த திட்டத்தில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எவ்வளவு தொகை ரொக்கமாக வழங்கப்படும் என்பதும் கேள்விக்குறியாகவுள்ளது.
இந்த உதவித்தொகைத் திட்டம் தாய்லாந்து பொருளியலை வலுப்படுத்தும் என்ற நோக்கத்தில் அறிக்கவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்நாட்டு துணை நிதியமைச்சரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் இரண்டு வாரங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டார்.
திருவாட்டி பேடோங்டார்ன், தலைமையிலான அமைச்சரவை இம்மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேடோங்டார்ன் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த திரு ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தார்.
சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.