மலாக்கா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பெரும்பாலான ஆட்டங்கள் ஆசிய நேரப்படி நள்ளிரவுக்குப் பிறகு அல்லது அதிகாலை நேரங்களில் நடக்கின்றன. இதனால் பல ரசிகர்கள் விடியவிடிய ஆட்டங்களைப் பார்த்துவிட்டு காலை நேரங்களில் அலுவலகங்களில் திணறுகின்றனர்.
இச்சம்பவங்களைக் குறிக்கும் விதமாக மலேசியாவின் மலாக்கா மாநில முதல்வர் அப்துல் ராவுஃப் யூசோ அரசாங்க ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நள்ளிரவு நேரங்களில் காற்பந்தைப் பார்த்துவிட்டு பொதுமக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கோட்டைவிடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
“உலகக் கிண்ணப் போட்டி தரும் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதே நேரம் அரசாங்க ஊழியர்கள் தங்களது கடமையில் கண்ணும் கருத்தாக இருக்க வேண்டும்,” என்று திரு அப்துல் ராவுஃப் குறிப்பிட்டார்.
“காற்பந்தைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. வேலைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து,” என்று அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தெரிவித்தார்.
“அரசாங்க ஊழியர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகம் வர வேண்டும். அவர்களது கடமையைச் சொன்ன நேரத்திற்குள் சிறப்பாக முடிக்க வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது,” என்றும் திரு அப் ராஃப் நினைவூட்டினார்.

