தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தின் முன்னாள் அரசியாரின் ஓராண்டு இறுதி அஞ்சலி தொடக்கம்

2 mins read
d27587ee-7bf9-494b-8ef0-977a77cb82c9
பேங்காக்கின் சுலாலொங்கோர்ன் முன்னாள் அரசியார் சிரிகிட் காலமான செய்தியைக் கேட்டு மக்கள் துக்கப்படுகின்றனர். - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் அரசியார் சிரிகிட்டின் ஓராண்டு இறுதி அஞ்சலி,  ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தொடங்கியது.

அரசியாரின் நல்லுடல், பேங்காக்கின் மன்னர் அரண்மனையில் வைக்கப்பட்ட பின்னர் பலர் அஞ்சலி செலுத்த முற்படுவர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை அவரது நல்லுடல், சுலாலொங்கோர்ன் மருத்துவமனையில் இருந்தது.

தாய்லாந்தில் பலர் அரச குடும்பத்தினரைப் பெரிதும் மதிக்கின்றனர். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரச குடும்பத்தின் உருவப்படங்கள் தாய்லாந்தின் பல்வேறு பொது இடங்களிலும் வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும்.

தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜ்ஜிரலொங்கோர்னின் தாயாரான சிரிகிட், அக்டோபர் 24ல் தமது 93வது வயதில் உயிரிழந்தார். 

தாய்லாந்து தலைநகரிலுள்ள மின்திரைகள், காலமான முன்னாள் அரசியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் வாசகங்களைக் காண்பிக்கின்றன. 

அத்துடன், பொதுவெளிக்கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தவும் அடுத்த 90 நாள்களுக்கு கறுநிற உடைகளை அணியும்படியும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தாய்லாந்தின் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜுடன் திருமணத்தில் 66ஆண்டுகளாக இணைந்திருந்த அரசியார் சிரிகிட், நாட்டின் தாயாராகப் போற்றப்பட்டார். வண்ண ஆடை அலங்காரக் கலைநயத்திற்காகவும் புகழப்பட்ட அவரை முன்னாள் அமெரிக்கத் தலைமகள் ஜேக்கி கென்னடியுடன் சில மேற்கத்திய ஊடகங்கள் ஒப்பிட்டன. 

மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ், 1946 முதல் 2016 வரை அரியணையில் இருந்தார். மன்னர் பூமிபோல் மறைந்து கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரைப் பலர் இன்றளவும் போற்றுகின்றனர்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிகின்றனர். ஊடகத்தளங்கள் கறுப்பு வெள்ளையாக மாற்றப்பட்டது. அரசியாரின் மறைவை அடுத்து  தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல்,  அக்டோபர் 25ஆம் தேதியன்று மலேசியாவிலுள்ள ஆசியான் உச்சநிலைக் கூட்டத்திற்குத் தாமதமாகப் புறப்பட்டார்.

இருந்தபோதும் அவர், கம்போடியாவுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 40 பேரின் உயிரைக் குடித்த கம்போடியா-தாய்லாந்து பூசலை முடிவுக்குக் கொண்டுவருவது உடன்பாட்டின் நோக்கம்.

குறிப்புச் சொற்கள்