கோலாலம்பூர்: மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மின்சிகரெட்டுகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அது பல கடைகளில் தொடர்ந்து விற்பனையாகி வருவது கவலை தருகிறது.
சட்டவிரோதமான மின்சிகரெட்டுகளையும் அதைச் சார்ந்த பொருள்களையும் விற்பனை செய்தால் தண்டனை விதிக்கப்படும் என்று அறிந்தும் கடைகள் தொடர்ந்து விற்பனையில் ஈடுபடுகின்றன.
குறிப்பாக நிக்கோட்டின் அளவு அதிகமாக உள்ள மின்சிகரெட்டுகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பல கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன.
சில கடைகளில் அனுமதி வழங்கப்பட்ட 20 மில்லிகிராம்/ மில்லிலிட்டர் அளவைவிட அதிக நிகோட்டின் கொண்ட பொருள்களின் விற்பனை வெளிப்படையாக நடக்கிறது. அந்தப் பொருள்களில் சுகாதார எச்சரிக்கையும் இல்லை.
3,000 இழுப்புகளுக்கு (puffs) மேல் பயன்படுத்தக்கூடிய ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ‘வேப்’ சாதனங்கள், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பகிரங்கமாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மின்சிகரெட்டுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் வருவதற்கு முன்னர் கடைகள் பல்லாயிரக்கணக்கான மின்சிகரெட்டுகளையும் அது சார்ந்த பொருள்களையும் வாங்கின. தற்போது அவற்றை விரைவாக விற்பனை செய்ய கடைகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
சில கடைகளில் மின்சிகரெட்டுகள் மறைமுகமாகவும் சில கடைகளில் வெளிப்படையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
சட்டவிரோத மின்சிகரெட்டுகளுக்குத் தேவை அதிகமாக இருப்பதாகவும் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் சில கடைகள் அரசாங்கச் சட்டத்தை மதித்து சட்டவிரோதப் பொருள்களை விற்பனையிலிருந்து அகற்றியுள்ளன.

