இணையவழிச் சேவல் சண்டைக் கும்பல் முறியடிப்பு; 174 பேர் கைது

இணையவழிச் சேவல் சண்டைக் கும்பல் முறியடிப்பு; 174 பேர் கைது

2 mins read
bdf9342d-abb5-43f4-957e-4307f2521d54
இணையம் மூலம் சேவல் சண்டையால் ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து, பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே மே 2022ல் அதற்குத் தடை விதித்தார். - படம்: எஸ்பிஎச் மீடியா

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள விளையாட்டரங்கு ஒன்றில் நாள்தோறும் ஏறத்தாழ 500 சேவல் சண்டைகளை நடத்திவந்த ‘இ-சபோங்’ எனப்படும் இணையவழிச் சேவல் சண்டைக் கும்பலை அந்நாட்டுக் காவல்துறையினர் முறியடித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையில், பந்தயம் கட்டியவர்கள் உட்பட 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசியத் தலைநகர் குற்றப் புலனாய்வு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைவர் கர்னல் ஜான் கியாகுய் செய்தியாளர்களிடம் பேசுகையில், டோண்டோவிலுள்ள விட்டாஸ் பகுதியில் இருக்கும் விளையாட்டரங்கில் இந்தச் சட்டவிரோத நடவடிக்கை குறித்து 2025ஆம் ஆண்டிறுதியில் கிடைத்த தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இரவு சோதனை நடத்தியதாகத் தெரிவித்தார்.

முன்பு சூதாட்டம் மூலம் பேரளவில் பணம் சம்பாதித்த சார்லி ‘அட்டாங்’ ஆங் காலத்தில் நடத்தப்பட்ட 300 சண்டைகளுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்த விளையாட்டரங்கில் ஏறத்தாழ 500 சேவல் சண்டைகள் இணையத்தில் ஒளிபரப்பப்படுவதாக கர்னல் கியாகுய் மதிப்பிட்டுள்ளார்.

2021க்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடையில் சேவல் சண்டையில் ஆர்வம் கொண்ட குறைந்தது 34 பேர் மாயமாகினர். பலரை ஏமாற்றியதற்காக ஆங் அவர்களைக் கொல்ல உத்தரவிட்டதாக சாட்சி ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். இணையம் மூலம் சேவல் சண்டையால் ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து, பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே மே 2022ல் அதற்குத் தடை விதித்தார்.

மாயமான அந்த நபர்கள் தொடர்பாக கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் ஆங் உள்ளிட்ட 22 பேர் மீது கடந்த டிசம்பர் மாதம் சுமத்தப்பட்டன. அன்றிலிருந்து ஆங் தலைமறைவாக உள்ளார்.

குறிப்புச் சொற்கள்