பெய்ஜிங்: உலக நாடுகளை அதிகம் அச்சுறுத்திவரும் மோசடி நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய இணைய விளையாட்டுகள் சீனாவில் உருவாகியுள்ளன.
இணையத்தில் சந்தித்த நபர் ஒருவர் மயக்க மருந்தை பயன்படுத்தி ஆடவர் ஒருவரைக் கடத்துகிறார். சிறிது நேரம் கழித்து கண் விழிக்கும் ஆடவரைச் சுற்றி துப்பாக்கிகளுடன் நிற்கும் நபர்கள் மோசடி நிலையத்தில் வேலை செய்யும்படி மிரட்டுகின்றனர். குறிப்பிட்ட தொகையை மோசடி மூலம் ஈட்டினால் ஆடவர் அங்கிருந்து விடுவிக்கப்படுவார்.
இப்படி தத்ரூபமாக மோசடிச் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ‘பிளட் மணி: லீத்தல் ஈடன்’ (Blood Money: Lethal Eden) என்ற இணைய விளையாட்டு.
இம்மாதம் 10ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இணைய விளையாட்டு சீனாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
‘பிளட் மணி’ என்ற கற்பனை இணைய விளையாட்டில் வரும் இடங்கள் எங்குள்ளவை என்பது தெரியாவிட்டாலும் மியன்மாரில் சீனர்களால் நடத்தப்படும் மோசடி நிலையங்களை அவைத் தழுவியிருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது.
விளையாட்டில் வரும் கதாபாத்திரங்கள் சீன மொழியில் பேசுவதுடன் அதன் முன்னோட்ட காணொளி மியன்மாரின் அதிகாரத்துவ மொழியாகிய பர்மிய மொழியில் உள்ளது.
மியன்மார் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் உலகெங்கிலுமிருந்து கடத்தப்படும் மக்கள் மோசடி நிலையங்களில் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அமெரிக்கர்கள் மட்டும் அந்த மோசடி நிலையங்களுக்கு இழந்த தொகை $16.6 பில்லியன் டாலர் என்று அமெரிக்க நிதியமைச்சு சொன்னது.
மோசடி நிலையங்கள் குறித்த இணைய விளையாட்டுகள் சீனாவில் அண்மை நாள்களாக அதிகரித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சீனாவைச் சேர்ந்த ஒருவர் மஸ்கராட் (Masquerade) என்ற இணைய விளையாட்டை அறிமுகம் செய்தார். அது மோசடிகளை எவ்வாறு செய்வது என்பதைக் கற்பிக்கிறது.
ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட ‘ஜியாவ் கேம்ஸ்’ (Jiao Games) என்ற நிறுவனம் ‘ஸ்கெம் சென்டர் ஸிமியூலேட்டர்’ (Scam Center Simulator) என்ற இணைய விளையாட்டை இவ்வாண்டு பிற்பகுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

