சோல்: தென்கொரியாவின் யோன்சே பல்கலைக்கழகத்தின் இணையவாசல் ஊடுருவப்பட்டதில் கிட்டத்தட்ட 10,000 தற்போதைய மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.
பல்கலைக்கழகத்தின் தகவல், தொடர்பு அலுவலகம் அதுகுறித்து வியாழக்கிழமை (அக்டோபர் 22) அறிக்கை வெளியிட்டது.
மாணவர்கள், பேராசிரியர்களின் அடையாள எண்கள், பெயர்கள், துறை சார்ந்த விவரங்கள், கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட தகவல்களில் அடங்கும்.
அக்டோபர் 20ஆம் தேதி உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணி) இந்தத் தகவல் கசிவு குறித்துத் தங்களுக்குத் தெரியவந்ததாகவும் உடனடியாகப் பாதிக்கப்பட்ட இணையச் சேவையகத்தை முடக்கியதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி காலை 10.04 மணி அளவில் இரண்டாவது முறையாக ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டதை அது கண்டறிந்தது.
பாதிக்கப்பட்டவர்களில் அனைத்துலக மாணவர்கள் சிலரும் அடங்குவர் என்பதைப் பல்கலைக்கழகம், ‘தி கொரியா ஹெரால்ட்’ நாளிதழிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், குடியுரிமைப் பதிவு எண்கள், வெளிநாட்டினர் பதிவு எண்கள், கடப்பிதழ் எண்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இதில் கசியவில்லை என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது. தகவல் கசிவுக்கான மூலத்தைப் பல்கலைக்கழகம் தடுத்து நிறுத்தியுள்ளதுடன் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோர், எந்தெந்த தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளன என்பதை அக்டோபர் 22ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் உள்ள அறிவிப்பின் மூலம் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
ஊடுருவல் சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பல்கலைக்கழகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
