மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 65% மட்டுமே ஓடுகின்றன

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 65% மட்டுமே ஓடுகின்றன

படம்: பெர்னாமா

07 Oct 2026 - 10:15 am

2 mins read

கோலாலம்பூர்: செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, மலேசியாவில் 40.77 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த எண்ணிக்கையில் 65.3 விழுக்காடு, அதாவது 26.6 மில்லியன் வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அந்த 26.6 மில்லியன் வாகனங்களில் 16 மில்லியன் கார்களும் 9.57 மில்லியன் மோட்டார்சைக்கிள்களும் அடங்கும் என்றது அமைச்சு.

2024ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 38.7 மில்லியனாக இருந்தது. அதற்கடுத்த ஆண்டு 1.62 மில்லியன் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 847,000 கார்களும் 703,000 மோட்டார்சைக்கிள்களும் அடங்கும்.

அதிக வாகனங்கள் பதிவாவது, பொதுமக்கள் இன்னும் தனியார் வாகனங்களை அதிகம் சார்ந்திருப்பதையே உணர்த்துவதாக எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலும் அதிக விபத்துகளும் நிகழும் அபாயம், காற்று மாசுபாட்டால் உடல்நலப் பாதிப்பு போன்றவை அதிக வாகன எண்ணிக்கையால் நிகழக்கூடியவை என்றது அமைச்சு.

அதற்கு மூன்று வழிகளில் தீர்வுகாணலாம் என்று அது பட்டியலிட்டது. பொதுப் போக்குவரத்தை வலுவாக்குவது, ரயில் மூலம் அதிகச் சரக்குகளைக் கொண்டுசெல்வது, இலக்குகளை வகுத்துப் போக்குவரத்தை நிர்வகிப்பது போன்றவை அந்த வழிகள்.

‘சாலைப் போக்குவரத்திலிருந்து ரயில் போக்குவரத்திற்கு மாறுதல்’ எனும் செயல்திட்டத்தின்படி, கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்பின் உதவியுடன், சரக்கு ரயில் போக்குவரத்தின் பங்கை 2030ஆம் ஆண்டுக்குள் 13 விழுக்காடாக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

அந்த விகிதம் கடந்த ஆண்டு 6 விழுக்காடாக இருந்தது. அடுத்த நான்காண்டுகளுக்குள் அதனை இரு மடங்கிற்கும் மேல் அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கம்.

அதற்கான முயற்சிகள், துணைப் பிரதமர் தலைமையிலான சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த அமைச்சரவைக் குழுவால் ஒருங்கிணைக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவாகனம்பதிவு