லண்டன்: உலகின் பெரும்பகுதி எண்ணெய்யை விற்கும் நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பான ஓபெக் பிளஸ் (OPEC+), ஆகஸ்ட் மாதம் முதல் எண்ணெய் உற்பத்தி இலக்கை மேலும் உயர்த்தும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் படிப்படியாகத் தொடங்கியுள்ளதால் உலகளாவிய விநியோகம் அதிகரித்து, அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது.
ஜூன், ஜூலை மாதங்களைப் போலவே ஆகஸ்ட் மாதத்திலும் தினசரி எண்ணெய் உற்பத்தி அளவை 188,000 பேரல்களாக உயர்த்த ஓபெக் பிளஸ் அமைப்பு கொள்கை அளவில் உடன்பட்டுள்ளது.
ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளை உள்ளடக்கிய ஓபெக் பிளசின் ஏழு முக்கிய உறுப்பு நாடுகள், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் தங்களின் தினசரி உற்பத்தி ஒதுக்கீட்டை கிட்டத்தட்ட 800,000 பேரல்களாக உயர்த்தியிருந்தன.
இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாகச் சவூதி அரேபியா, குவைத், ஈராக் போன்ற முக்கிய நாடுகளின் எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான போக்குவரத்துப் பாதை முடங்கியது.
இதனால் இந்த உற்பத்தி உயர்வு வெறும் காகித அளவிலேயே இருந்தது. பிப்ரவரியில் தினசரி 42.77 மில்லியன் பேரல்களாக இருந்த ஓபெக் பிளஸ் உற்பத்தி, மே மாதத்தில் 33.13 மில்லியன் பேரல்களாக வீழ்ச்சியடைந்தது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளும் பிற நாடுகளும் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளால் ஜூன் மாதத்தில் உற்பத்தி மீளத் தொடங்கியது.
இருப்பினும், அது இன்னும் போருக்கு முந்தைய நிலையை எட்டவில்லை.

