நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI) சக்திவாய்ந்த சாட்ஜிபிடி (ChatGPT) செயலியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
மென்பொருள் குறிப்புகள் எழுதும் கருவிகள் (coding tools), செயற்கை நுண்ணறிவு முகவர்கள் (AI agents) போன்ற அனைத்தும் அடங்கிய செயலியைத் தயாரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
அமெரிக்கப் பங்குச் சந்தையில் ‘ஓப்பன்ஏஐ’ சேர நினைப்பதால் இந்த நடவடிக்கைகளை அது எடுப்பதாக பைனான்சியல் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) தெரிவித்தது.
புதிய செயலியை நோக்கி ‘ஓப்பன்ஏஐ’ நகர்வதால், நிறுவனத்தில் பல மாற்றங்களை அது செய்துவருகிறது. ஊழியரணியில் உள்ள பெரும்பாலானவர்கள் பெரிய நிறுவனங்களை ஈர்க்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
மேலும் தனக்குப் போட்டியாக உள்ள ஆந்த்ரோப்பிக் (Anthropic) நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வேலை செய்யவும் ‘ஓப்பன்ஏஐ’ ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனத்திடம் தகவல் கேட்டபோது அதனிடமிருந்து உடனடியாகப் பதில் ஏதும் வரவில்லை.
இன்னும் சில வாரங்களில் ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனத்தின் கோடெக்ஸ் (Codex) தளம் மெருகேற்றப்பட்டு வெளியாகவுள்ளது. ‘கோடெக்ஸ்’ மென்பொருள் குறிப்புகள் உருவாக்கும் தளம். அதில் மேலும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான ‘கோடெக்ஸ்’ தளம் பயனாளர்கள் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ‘கோடெக்ஸ்’ தளத்தை 2 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகக் கணக்குகள் பயன்படுத்துகின்றன.
தொடர்புடைய செய்திகள்
‘ஓப்பன்ஏஐ’ நிறுவன வருமானத்தில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டு வருமானம் ‘கோடெக்ஸ்’ மூலம் வருவதாக பைனான்சியல் டைம்ஸ் கூறுகிறது.
அதேபோல் ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) செயலியின் பயனர் அனுபவத்தையும் ‘ஓப்பன்ஏஐ’ மாற்றியமைத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘சாட்ஜிபிடி’யை வாரம் 900 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர்.

