சரவாக்கில் $38.746 மி. செலவில் புதிய பாலம் திறப்பு

சரவாக்கில் $38.746 மி. செலவில் புதிய பாலம் திறப்பு

படம்: போர்னியோ போஸ்ட்

09 Nov 2026 - 5:37 pm

1 mins read

குச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலம், பிந்துலு வட்டாரத்தின் செபுவா நகரில் புதிய பாத்தாங் கெமெனா பாலம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் உள்ளூர் சமூகத்துக்குச் சாலைத் தொடர்புகளை மேம்படுத்துவதோடு பொருளியல் வளர்ச்சிக்கு மெருகூட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தைக் கட்ட 123 மில்லியன் ரிங்கிட் (38.746 மில்லியன் வெள்ளி) செலவானதாக சரவாக்கின் இடைக்கால முதல்வர் ஜொஹாரி ஒப்பெங் தெரிவித்தார்.

“பாலம் பயணங்களை மேலும் வசதியாக்குவதுடன் அப்பகுதியின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும்,” என்று அவர் திங்கட்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற பாலத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் கூறினார். பாத்தாங் கெமெனா பாலம், சரவாக் பொதுப் பணிப் பிரிவு செயல்படுத்தும் 21 பாலம் அமைக்கும் திட்டங்களில் ஒன்றாகும்.

இப்பாலம், பிந்துலு விமான நிலையத்திலிருந்து செபுவா சந்தைக்குப் போக மாற்று வழியாக விளங்கும் என்று சரவாக் இடைக்காலத் துணை முதல்வர் டக்லஸ் உகா தெரிவித்தார்.

இரண்டு சாலைத் தடங்களைக் கொண்டுள்ள புதிய பாலம் பாத்தாங் கெமெனா பகுதியில் 728.9 மீட்டர் தூரம் உள்ளதாக சரவாக் பொதுப் பணிப் பிரிவு குறிப்பிட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட துணைச் சாலைகளையும் உள்ளடக்கும்போது திட்டத்தின் மொத்த நீளம் 2.3 கிலோமீட்டராகும்.

குறிப்புச் சொற்கள்