சிட்னி: சிட்னியின் புதிய அனைத்துலக விமான நிலையம் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
பல்லாண்டுத் திட்டமிடலுக்குப் பிறகு, 5.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ($5.037 பில்லியன்) மதிப்பிலான புதிய விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) பணிகளைத் தொடங்கியது. இது நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்நகரத்திற்கு ஒரு மைல்கல் என்று பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய சிட்னிக்கு மேற்கே ஏறக்குறைய 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பேட்ஜெரிஸ் கிரீக்கில் அமைந்துள்ள புதிய ‘மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையம்’ 24 மணி நேரமும் இயங்கும். இது வேகமாக வளர்ந்துவரும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட நிலையத்திற்கு விமான நிறுவனங்கள் எளிதாகச் சேவைகளை வழங்க வழிவகுக்கும்.
சிட்னியின் மத்திய வணிகப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள தற்போதைய விமான நிலையத்தில், இரவு 11 மணி வரையிலும் காலை 6 மணிக்கு பிறகும் மட்டுமே விமானங்கள் புறப்படவும் தரையிறங்கவும் முடியும்.
இது மெல்பர்ன் போன்ற ஆஸ்திரேலியாவின் மற்ற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் விமான நிறுவனங்களின் நேர அட்டவணைத் தெரிவுகளைக் கட்டுப்படுத்துகிறது.
“50 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் முதன்முறையாக, ஆஸ்திரேலியா புதிய பெரிய விமான நிலையமொன்றைத் திறக்கிறது. இது பல பத்தாண்டுகால முயற்சியின் மைல்கல்,” என்று திரு அல்பனீஸ் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“இதை அதிகாரபூர்வமாகத் திறந்துவைப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,“ என்றும் அவர் கூறினார்.
குவான்டாஸ் நிறுவனத்தின் மலிவுக் கட்டணப் பிரிவான ஜெட்ஸ்டார், ஞாயிற்றுக்கிழமை கோல்ட் கோஸ்ட்டிற்கான முதல் விமானத்தை இயக்கத் திட்டமிட்டிருந்ததாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 80 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜூலை மாதம் சரக்கு விமானங்கள் இயங்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, தற்போது பயணிகள் சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
1980களில் மத்திய அரசாங்கத்தால் வாங்கப்பட்ட 1,780 ஹெக்டர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைந்துள்ளது. இது 15 ஆண்டுகாலத் திட்டமிடலுக்கும் ஏழு ஆண்டுகாலக் கட்டுமானப் பணிகளுக்கும் பிறகு 2025ஆம் ஆண்டு ஜூலையில் கட்டி முடிக்கப்பட்டது.
