வந்தது, குடித்தது, தணித்தது

வந்தது, குடித்தது, தணித்தது

1 mins read
5ee38059-8a33-4fba-addc-ffa1b2b51b5e
பூகி என்ற பெயருடைய மனிதக் குரங்கு உணவுக்கடைக்குள் புகுந்து பானம் எடுத்துப் பருகிய சம்பவம் சாபா மாநிலத்தில் நடந்துள்ளது. - படங்கள்: இணையம்

கோத்தா கினபாலு: வனவிலங்குகளையும் இந்த வெப்பகாலம் விட்டுவைப்பதாக இல்லை.

இணையத்தில் வலம்வரும் காணொளி ஒன்றில், ஒரு மனிதக் குரங்கு குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து குளிர்பானத்தை எடுத்துப் பருகும் வேடிக்கையான காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சாபா மாநிலத்திலுள்ள மழைக்காட்டு மேம்பாட்டு நிலையத்தில் அமைந்துள்ள உணவுக்கடையில் இந்தச் சம்பவம் நடந்தது.

பானம் இருந்த பாக்கெட்டுகளைக் குரங்கு எடுத்ததுடன் அதிலிருந்து குடிக்க முயல்வதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.

“கடும் வெப்ப நாளான இன்று, எதிர்பாராத விருந்தினர் ஒருவர் வந்ததுடன் எடுத்த பானத்திற்குப் பணம் தராமலும் போய்விட்டார்,” என்று சாபா காட்டுத்துறைத் துணைப் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஆர்தர் சுங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்குமுன் இந்த மனிதக் குரங்கு அதே இடத்திற்கு வந்திருந்தாலும், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பானம் எடுத்தது இதுவே முதல் முறை என்றார் அவர்.

அந்த ஆண் மனிதக் குரங்கின் பெயர், ‘பூகி’ என்று வனவிலங்கு அதிகாரிகள் தம்மிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒருமுறை உல்லாச விடுதி வரவேற்புக்கூடத்தில் சென்று மேலாளர் போல் பூகி அமர்ந்துகொண்டது என்ற வேடிக்கைத் தகவலை ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்