பெட்டாலிங் ஜெயா: கிட்டத்தட்ட ஏழாண்டுகளாகத் தமது வீட்டுக்குள் தொடர்ந்து கோல்ஃப் பந்துகள் வந்து விழுந்து சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததுடன் குடும்பத்தினருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்திய வழக்கில் அரசு ஓய்வூதியதாரர் ஒருவருக்கு 100,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெடா மாநிலத்தின் அலோர் செடார் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அய்மி ஜைனி அஜார் வெளியிட்டார்.
மனுதாரரின் வீட்டில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ‘தாருல்அமான் கோல்ஃப் ரிசார்ட்’ நிர்வாகமும் கோல்ஃப் திடலுக்கான நிலத்தின் உரிமையாளரும் தனிப்பட்ட முறையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு கூட்டுப் பொறுப்பாவார்கள் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறந்தவெளி பசுமைப் பகுதிக்கு அருகில் வாழ்வது என்பது அமைதியான வாழ்க்கையை அனுபவிப்பதாகும்; ஆனால், அதற்கு மாறாக ‘டீ பாக்ஸ் 7’ என்னுமிடத்திலிருந்து தவறாக அடிக்கப்படும் பந்துகளால் மனுதாரரான நஸ்லி அகமது மஹ்யாடின் தொடர்ச்சியான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஓய்வூதியதாரரின் வீட்டிற்குள் இனிமேலும் கோல்ஃப் பந்துகள் விழுவதைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதிவாதிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
“கோல்ஃப் விளையாட நிலத்தை வாடகைக்கு விடுவது சட்டபூர்வமான வணிகம்தான்; இருப்பினும், அருகில் வசிப்போரின் அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் சொத்து உரிமைகளை நியாயமற்ற முறையில் பாதிக்கும் வகையில் அதனை நடத்தக்கூடாது,” என்று தமது 21 பக்கத் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
