ஜோகூர் கூட்டுரிமை வீடு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

ஜோகூர் கூட்டுரிமை வீடு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

05 Nov 2026 - 5:19 pm

1 mins read

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் உள்ள கூட்டுரிமைக் குடியிருப்பு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட காலதாமதத்திற்காக, சிங்கப்பூரர்கள் உட்பட பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 10.56 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரின்சஸ் கோவ் கூட்டுரிமைக் குடியிருப்புத் திட்டத்தில் உள்ள 84 வீடுகள் தொடர்பான இந்த வழக்கில், ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் வாங்குபவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.

குடியிருப்புத் திட்டத்தின் தொடக்கக் கட்டப் பணிகளை இரண்டாகப் பிரித்ததன் மூலம், கட்டுமான நிறுவனமான ஆர் அண்ட் எஃப் டெவலப்மென்ட் சென்டிரியான் பெர்ஹாட் வாங்குபவர்களுடனான ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்று நீதிமன்றம் உறுதிசெய்தது.

இதனால், சில பொதுப் பயன்பாட்டு வசதிகள் உட்பட பரந்து விரிந்த அக்குடியிருப்பின் குறிப்பிட்ட பகுதிகள் இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே, வாங்குபவர்களுக்கு வீட்டுச் சாவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், மேலும் 39 வீடுகள் தொடர்பான கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம், அவற்றை வாங்கியோர் தலா 10,000 ரிங்கிட்டை ஆர் அண்ட் எஃப் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. கட்டுமானத் திட்ட வரைபடத்தை சொத்து மேம்பாட்டாளர் மாற்றியமைத்த பிறகே இவர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆர் அண்ட எஃப் நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்