குற்றச்சாட்டை மறுத்த மதுரோ: நிரபராதி என்ற வாதத்தை நிராகரித்த நீதிமன்றம்

2 mins read
22916bf6-1207-44b2-9a07-a64403568000
அமெரிக்காவில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தலை ஊக்குவித்ததாக வெனிசுவேலா அதிபர் நிக்கலாஸ் மதுரோ மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, ஜனவரி 3ம் தேதி தமது ராணுவப்படையின் மூலம் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசுவேலா நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கலாஸ் மதுரோ, தம்மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

நியூயார்க் நீதிமன்றத்தில் முதன்முறையாக முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோ, 63, ’’நான் நிரபராதி; எந்தவொரு குற்றமும் புரியவில்லை. நான் கண்ணியமான நபர். அமெரிக்கா சுமத்தியுள்ள போதைப்பொருள் சார்ந்த எந்தவொரு குற்றச்செயலிலும் நான் ஈடுபடவில்லை,’’ என்று கூறினார்.

தாம் வெனிசுவேலா நாட்டின் அதிபர் என்பதை வலியுறுத்திய அவர், ஸ்பானிய மொழியில் பேசினார். மதுரோவின் வாதத்தை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் விளக்கினார்.

அண்மையில் கைது செய்யப்பட்டு, பதவியிழந்த வெனிசுவேலா அதிபர், அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் இருவரும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திங்கட்கிழமை (ஜனவரி 5) மென்ஹாட்டன் மத்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சிலியா புளோரஸும் தாம் குற்றவாளி அல்லர் என்ற வாதத்தை முன்வைத்தார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தலை ஊக்குவித்ததாக வெனிசுவேலா அதிபர் மதுரோ மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த 3ஆம் தேதி வெனிசுவேலா மீது திடீர்த் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே மதுரோவின் வாதத்தை மாவட்ட நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டெய்ன் நிராகரித்துவிட்டார். இவ்வழக்கு மீண்டும் மார்ச் 17ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, நீதிமன்றத்திற்கு வெளியே மதுரோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலர் கூடியிருந்தனர்.

இந்நிலையில், ஆட்சிக்கவிழ்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் வெனிசுவேலாவில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. குறிப்பாக, அந்நாட்டு அதிபர் மாளிகைக்கு அருகில் திங்கட்கிழமை (ஜனவரி 5) இரவு துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை உள்ளூர்வாசிகள் பலர் நேரில் கண்டதாகவும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் அதிபர் மாளிகைக்குள் விரையும் காணொளியும் சமூக ஊடகங்களில் தென்படுவதால், அடுத்து என்ன நிகழுமோ என்று குடிமக்கள் மிகுந்த கலக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் அனைத்துலகச் செய்திக்குறிப்புகள் தெரிவித்தன.

நாடுகளின் இறையாண்மை, அனைத்துலகச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர், இந்தோனீசியா உள்பட பல நாடுகளும் இவ்விவகாரத்தில் ஆழ்ந்த கவலை வெளிப்படுத்தியுள்ள வேளையில்,  வெனிசுவேலாவில் தற்போது நிகழும் சம்பவங்கள் குறித்து ஆசிய நாடுகளும் தங்கள் கவலைகளைப் பதிவு செய்துள்ளன.

வெனிசுவேலா மீதான அமெரிக்கத் தாக்குதல் உலக நாடுகளுக்கிடையேயான ஒழுங்குமுறை விதிமீறல் என்றும் அது அனைத்துலக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் ஆசிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. 

குறிப்பாக எல்லைப் பூசலை எதிர்கொள்ளும் வட்டார நாடுகளுக்கு இது மேலும் வருத்தம் அளிப்பதாகவும் அரசியல் ஆர்வலர்கள் சுட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில், இத்தகைய நடவடிக்கைகள்  சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை ஒருதலைப்பட்சமாகச் செயல்படத் தூண்டக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்