நோம் பென்: கம்போடிய உள்துறை அமைச்சின் ஊழியரணியில் 2,200க்கும் மேற்பட்ட போலி அதிகாரிப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சார் சொக்கா தெரிவித்துள்ளார். அதே வேளையில், பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட அல்லது படையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளின் பதவி நிலைகள் அவர்களின் பொறுப்புகளுக்கும் பணிகளுக்கும் ஏற்ப சீரமைக்கப்படுவதை உறுதிசெய்ய அமைச்சு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் விவரித்தார்.
துல்லியமான அதிகாரிப் பதிவேட்டை உருவாக்கும் நோக்கில், காவல்துறை அதிகாரிகள், அமைச்சின் அரசாங்க ஊழியர்கள் ஆகியோருக்கான நாடளாவிய கணக்கெடுப்பை உள்துறை அமைச்சு தொடங்கியுள்ளது. பாதுகாப்புப் படைகளுக்கான நான்கு முக்கிய முன்னுரிமைப் பணிகளில் இந்தக் கணக்கெடுப்பு முதலாவது பணியாகும் எனத் திரு சொக்கா விவரித்தார்.
அமைச்சின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) காலை நடைபெற்ற தேசியக் காவல்துறைக் கணக்கெடுப்பின் தொடக்க விழாவில் பேசிய திரு சொக்கா, இந்த நடவடிக்கையின் ஆறு முக்கிய நோக்கங்களை எடுத்துரைத்தார். தற்போதைய ஊழியரணியை அடையாளம் காணுதல், உண்மையான ஆள்பலத் தேவைகளைத் தீர்மானித்தல், அதிகாரிகளின் ஆற்றல்களை மதிப்பிடுதல், நிர்வாக மேலாண்மையை வலுப்படுத்துதல், ஊழியர் நிர்வாகத்தை நவீனமயமாக்குதல், கண்டறியப்படும் முடிவுகளைக் கொண்டு கொள்கை முடிவுகளை எடுத்தல் ஆகியவை அந்த ஆறு நோக்கங்களாகும்.
நீண்டகால மனிதவளத் தரவுத்தளத்தை உருவாக்குவது, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது, தேசிய வரவுசெலவுத் திட்டத்திலிருந்து ஏற்படும் தேவையற்ற செலவினங்களைக் குறைக்க உதவுவது ஆகியவை இதன் இலக்குகள் என்றார் அவர்.
இதன் முதற்கட்டப் பணிகள் பொது மனிதவளத் துறை, பொதுச் செயலகம், பொது மின்னிலக்கத் தொழில்நுட்பம், கல்வி, பரப்புரைத் துறை ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு எந்தவோர் அதிகாரிக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அல்லது அவர்களைத் துன்புறுத்துவதற்கோ அன்று எனத் தெரிவிக்கப்பட்டது.
மாறாக, அது தனிப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் துல்லியமான பணியாளர் ஆவணங்களை உருவாக்குவதற்கே என்று திரு சொக்கா வலியுறுத்தினார்.
