மரம் நடும் திட்டம்: 2023 முதல் கோலாலம்பூரில் 22,000க்கும் மேற்பட்ட மரங்கள்

மரம் நடும் திட்டம்: 2023 முதல் கோலாலம்பூரில் 22,000க்கும் மேற்பட்ட மரங்கள்

படம்: த ஸ்டார்

14 Nov 2026 - 2:31 pm

1 mins read

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் 2023ஆம் ஆண்டுமுதல் 22,000க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன.

2040ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மரங்களை நடும் இலக்கை அடைவதற்கும் தலைநகரைப் பசுமையாக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்கும் உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோலாலம்பூர் நகர மண்டபத்தின் ‘ஸ்பாஞ்ச் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக, இவ்வாண்டு நடப்பட்டுள்ள கிட்டத்தட்ட 9,000 மரங்களும் அந்த எண்ணிக்கையில் அடங்கும். அடுத்த ஆண்டுக்குள் ‘குறுங்காடு’ அமைப்பிலான 32 திறந்தவெளிப் பகுதிகளை நகர மண்டபம் அமைத்து வருவதாகப் பிரதமர் அலுவலக (மத்திய பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

“திட்டமிடப்பட்டுள்ள சிறிய பூங்காக்கள் உட்பட மொத்தம் 183 இடங்களில் 2040ஆம் ஆண்டுக்குள் பொழுதுபோக்கு வசதிகள் அமைக்கப்படும். அடர்த்தியான, அடுக்கு முறையிலான மரக்கன்றுகளை நடுவதன்மூலம் குறுங்காட்டை உருவாக்குவது மரங்களின் நிழல் பரப்பை அதிகரிப்பதோடு, சுற்றுப்புற வெப்பநிலையைக் குறைக்கவும் உதவும்,” என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர் மேயர் ஃபட்லுன் மக் உஜுத்துடன் இணைந்து ஜாலான் பெலியா, ஜாலான் ராஜா லாவுட் ஆகிய இடங்களில் புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்ட சிறிய பூங்காக்களைப் பார்வையிட்ட பின்னர் திருவாட்டி இயோ அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் விளக்கமளித்த அவர், நடப்பட்டுள்ள மரங்களின் ஆரோக்கியம், நிலைத்தன்மை, அபாயங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக 21 நிபுணர்களை நகர மண்டபம் ஈடுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்