மியன்மார் கடல் பகுதியில் படகுகள் கவிழ்ந்ததில் 500க்கும் மேற்பட்டோர் பலி: ஐநா

மியன்மார் கடல் பகுதியில் படகுகள் கவிழ்ந்ததில் 500க்கும் மேற்பட்டோர் பலி: ஐநா

படம்: ராய்ட்டர்ஸ்

16 Jul 2026 - 2:59 pm

1 mins read

ஜெனீவா: மியன்மார் கடல் பகுதியில் கடந்த சில தினங்களில் இரண்டு பெரிய அகதிப் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 500க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) தெரிவித்துள்ளது.

மியன்மார் ராக்கைன் மாநிலத்தில் இருந்து ஜூன் மாத இறுதியில் புறப்பட்ட இரு படகுகள் விபத்தில் சிக்கியதாக ஐநா அகதிகள் முகமை, அனைத்துலக இடம்பெயர்வு அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை குறிப்பிட்டது.

உள்நாட்டுப் போர், வறுமை காரணமாக பங்ளாதேஷ் அகதி முகாம்களிலிருந்தும் மியன்மாரிலிருந்தும் தப்பித்து பாதுகாப்பான இடங்களைத் தேடி அவர்கள் கடல்வழியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதில் ஏறக்குறைய 250 பேருடன் சென்ற முதல் படகு, புறப்பட்ட சில நாள்களிலேயே தொடர்பை இழந்தது. மற்றொரு படகு கிட்டத்தட்ட 280 பயணிகளுடன் ஜூலை 8ஆம் தேதி மியன்மார் அயேயர்வாடி கடலோரப் பகுதியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.

கடுமையான மழை, மோசமான வானிலை நிலவும் சூழலில் பயணம் மேற்கொள்ளப்பட்டதே விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இத்தகைய ஆபத்தான மனிதக் கடத்தல் கட்டமைப்புகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடலில் தவிக்கும் அகதிகளைப் மீட்கும் தேடுதல் பணிகளை அனைத்துலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மியன்மார்கப்பல் விபத்துஉயிரிழப்புஐநாஅகதிபடகுகடல்