ஜோகூர்: மனிதருக்கும் வனவிலங்குகளுக்கும் இடைப்பட்ட 66,000க்கும் அதிமான மோதல் சம்பவங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவாகியுள்ளன.
2020 முதல் 2024 வரையில் பதிவான இந்தச் சம்பவங்களால் 46.5 மில்லியன் ரிங்கெட் (14 மில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்பட்டது.
ஜோகூர் மாநில அரசுக்கான நிர்வாக நடுவமாகச் செயல்படும் கோத்தா இஸ்கந்தரில் செவ்வாய்க்கிழமை (மே 20) நடந்தேறிய ஜோகூர் மனித, யானை சிறப்புப் பணிக்குழுவின் தொடக்கவிழாவில் இயற்கை வள, சுற்றுப்புற நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது இதனைத் தெரிவித்தார்.
குரங்குகள், யானைகள், காட்டுப் பன்றிகள், புலிகள் உள்ளிட்ட விலங்குகளுடன் தொடர்புடைய சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து 66, 825 புகார்களாகப் பதிவாகியுள்ளன. ஜோகூரில் மட்டும் 7,996 புகார்கள் கிடைக்கப்பெற்று இவற்றால் 6.88 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரு நிக் நஸ்மி கூறினார்.
மனிதருக்கும் யானைக்கும் இடையிலான சம்பவங்களுடன் உயிர்களும் சாெத்துகளும் சம்பந்தப்படுவதால் அவை அவசரமானவை என்றும் அவர் கூறினார்.
ஜோகூரில் இது கவனிக்கப்படவேண்டிய விவகாரம் என்பதால் அந்த மாநிலம் இதனைக் கையாள பணிக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
மின் கழுத்துவார்கள் வழியாக யானைகளின் இருப்பிடங்களைக் கண்காணிப்பது, யானை இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களிலும் பண்ணைகளிலும் மின் கம்பங்களைப் பொருத்துவது உள்ளிட்டவற்றை மத்தியஅரசின் நிலையில் தமது அமைச்சு செயல்பட்டு வருவதாகத் திரு நிக் நஸ்மி கூறினார்.
கோத்தா திங்கி, குளுவாங் போன்ற இடங்களில் யானைகளால் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் போன்ற பிரச்சினைகள் இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்டன.

