கோலாலம்பூர்: மலேசியாவில் 2024ஆம் ஆண்டுமுதல் மொத்தம் 96,844 வெளிநாட்டினர் பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுக் காவல்துறைத் தலைவர் முகம்மது காலிட் இஸ்மாயில் சனிக்கிழமை (நவம்பர் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்பையும் ஒழுங்கையும் கட்டுக்குள் வைத்திருப்பதற்குக் கடுமையான வகையில் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
“நாட்டில் சட்டத்தை மீறி, எவ்விதக் குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் எந்த வெளிநாட்டினர்மீதும் நாங்கள் உறுதியான நடவடிக்கையை எடுப்போம். ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் வழியாக இதர நாடுகளின் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து உளவுத் தகவல்களைப் பகிர்ந்து மேலும் பயன்மிக்க அமலாக்கத்தை நடைமுறைப்படுத்துவோம்,” என்று அவரது அறிக்கையில் தெரிவித்தார்.
“மலேசியக் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தரவுகளின்படி, 2024ல் மொத்தம் 33,136 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அந்த எண்ணிக்கை 2025ல் 36,740 என ஏற்றம் கண்டது. அதன்படி விகிதம் 10.8 விழுக்காடு அதிகரித்து, 3,604 நபர்கள் அவ்வாண்டில் கூடுதலாகக் கைதாகினர். மேலும், 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 26,968 வெளிநாட்டினர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று அவர் விவரித்தார்.
மலேசியர்கள் உட்பட குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் அமலாக்க நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று திரு முகம்மது காலிட் வலியுறுத்தினார்.
“சட்டத்தின்முன் அனைவரும் ஒன்றுதான் என்பதை நிலைநாட்டுவோம். எந்த நாட்டைச் சேர்ந்த தனிப்பட்ட மனிதராக இருந்தாலும் அவரது சமுதாய நிலை, பதவி, ஆகியவற்றைக் கடந்து நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டவரே,” என்று அவர் விளக்கினார்.
சட்டத்துக்கு எதிரான எந்தச் செயலும் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் சட்டம் வழங்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அதிகாரிகளுக்கு குற்றங்கள் சார்ந்த தகவல்களை வழங்கும் பொதுமக்களின் ஆதரவு தொடரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பும் விழிப்புணர்வும் குற்றத் தடுப்பு முயற்சிகளுக்கு இன்றியமையாதவை எனவும் அவர் தெரிவித்தார். அவற்றின் வழியாகத்தான் பொதுப் பாதுகாப்பும் ஒழுங்கும் தொடர்ந்து நிலைபெறும் என்று அவர் கருத்துரைத்தார்.
