யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள், மோசடிக் குற்றங்களில் ஈடுபட்ட 1,600க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை கைதுசெய்துள்ளதாக அரசாங்க ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இணைய மோசடிக்கு மையமாக உள்ள தாய்லாந்தின் எல்லைப் பகுதியில், ‘சுவீ கொக்கோ’ எனும் இடத்தில் நவம்பர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி (சனிக்கிழமை) வரை அதிரடி சோதனை நடத்தியுள்ளதாக மியன்மார் ராணுவம் “தி குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்” என்ற ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளது.
மியன்மாருக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ள 1,590 வெளிநாட்டினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் ராணுவ அதிகாரிகள் 2,893 கணினிகள், 21,750 கைப்பேசிகள், ‘101 ஸ்டார்லிங்க்’ என்ற பெயருடைய செயற்கைக்கோளுடன் தொடர்புகொள்ளக்கூடிய சாதனங்கள் ஆகியவற்றை மோசடிக் கும்பல்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
அவற்றைக் கொண்டு பலவகையான மோசடிக் குற்றங்கள் எல்லையில் உள்ள தொழில் மையங்கள் என்ற போர்வையில் இருந்த கட்டடங்களில் நடந்துள்ளன.
ஏஎப்ஃபி ஊடகம், அக்டோபர் மாதத்தில் அந்தப் பகுதியில் நடத்திய விசாரணையில், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழங்கும் இணையச் சேவைக்கான சாதனங்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க பெருஞ்செல்வந்தரான இலோன் மஸ்கின் நிறுவனமான ஸ்டார்லிங், மியன்மார் தாய்லாந்து எல்லையில் மோசடிக் கும்பல்களால் செயல்படுத்தப்பட்ட 2,500க்கும் மேற்பட்ட சாதனங்களுக்கான இணைப்பை துண்டித்துவிட்டதாக அறிவித்தது.
மியன்மார் ஊடகம், சுவீ கொக்கோ பகுதியில் நவம்பர் 22ஆம் தேதியன்று 100 சீனர்கள் உள்பட மொத்தம் 223 சந்தேக நபர்கள் ராணுவத்தால் சூதாட்டம் மற்றும் இணைய மோசடிக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
ஒரு கனரக வாகனம் நூற்றுக்கணக்கான கணினிகளை தரைமட்டமாக்கும் காணொளி மியன்மார் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள மக்கள் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் S$48 பில்லியனை (US$37 பில்லியன்) மோசடிகளில் இழந்துள்ளதாகவும் உலகளாவிய அளவில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகம் எனவும் ஐக்கிய நாட்டு அறிக்கையொன்று குறிப்பிட்டுள்ளது.

