சிட்னி: வருடாந்தர பசிபிக் தீவுகள் கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் தைவான் பங்கேற்றது குறித்துச் சீனா கவலை தெரிவித்திருக்கிறது.
பலாவுவில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தைவான் கலந்துகொண்டதற்குப் பின்விளைவுகள் இருக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.
தைவானைத் தனது சொந்தப் பகுதியாகச் சீனா பார்க்கிறது. வட்டார ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்ட இந்தச் சந்திப்பில் சீனா-தைவான் இடையிலான பதற்றம் முக்கிய இடத்தைப் பிடித்தது.
தைவான் இந்த நிகழ்வில் பங்கேற்றது குறித்து, பசிபிக் தீவு விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் சியான் போ செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.
“எப்போதும் விளைவுகள் இருக்கவே செய்யும்,” என்றார் அவர்.
“இது அச்சுறுத்தலன்று,” என்று கூறிய அவர், விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றி ஏதும் சொல்லவில்லை.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பலாவு நாடு, தைவானுடன் அரசதந்திர உறவுகளைப் பேணிவருகிறது.
“இதற்கு அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே இது நடந்திருக்கக்கூடாது. இவ்வாறு செய்வது மிகவும் பொருத்தமற்றது என நாங்கள் கருதுகிறோம்,” என்று திரு சியான் தெரிவித்தார்.
சீனத் தூதரின் கருத்துகள் குறித்துச் செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் பதில் தந்தார்.
“இங்கு என்ன நடக்கிறது என்பதை பசிபிக் தீவுகள் கருத்தரங்கே முடிவுசெய்கிறது. வேறு எந்த நாடும் அல்ல,” என்று அவர் கூறினார்.
“இது முதன்மையாக பசிபிக் குடும்பத்தின் சந்திப்பு. இந்த நிகழ்வில் பங்கேற்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்,” என்று திரு அல்பனீஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்சும் இதே கருத்தை முன்வைத்தார். இந்த அமைப்பு தனது உறுப்பினர்களைத் தவிர மற்ற நாடுகளிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதில்லை என்று அவர் கூறினார்.
சீனாவைப் போன்று தைவான் இந்த அமைப்பின் அதிகாரபூர்வ உரையாடல் பங்காளியன்று, மாறாக அது வளர்ச்சிப் பங்காளியாக இருக்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா, இந்தியா, ஜப்பான் முதலியவை இந்த அமைப்பின் 21 உரையாடல் பங்காளிகளில் அங்கம் வகிக்கின்றன.


