லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குறைந்தது 63 பேர் பலியானதோடு ஏறக்குறைய 300 பேர் காயமடைந்தனர்.
ஜூன் மாதப் பிற்பகுதியில் தொடங்கிய பருவமழையால் பலியானோர் எண்ணிக்கை குறைந்தது 159க்கு அதிகரித்துள்ளது.
கனத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது; கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. வலுவிழந்த கூரைகள் இடிந்துவிழுந்ததால் அதிக மரணங்கள் நேர்ந்தன.
ஜூன் மாத இறுதியிலிருந்து பருவமழையால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 103 பேர் மாண்டனர்; 393 பேர் காயமடைந்தனர்; 120க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.
ஜூன் 25 முதல் நாடளவில் குறைந்தது 159 மரணங்கள் நேர்ந்தன என்றும் 1,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன என்றும் தேசியப் பேரிடர் நிர்வாக ஆணையம் தெரிவித்தது.
வடக்கில் உள்ள மங்களா பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளநீர் அங்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாகப் பாகிஸ்தான் வானிலை பிரிவு சொன்னது. ஜீலன் ஆற்றிலிருந்து பிரியும் சிற்றாறுகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது.

