முல்தான்: பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றிய படகு ஒன்று கவிழ்ந்ததில், ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மீட்கப்பட்டனர் என்று பேரிடர் அமைப்பு ஒன்று சனிக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்தது.
முல்தான் மாவட்டத்தில் ஆற்றில் வலுவான நீரோட்டம் காரணமாக படகு கவிழ்ந்தது. இருப்பினும், அதில் பயணம் செய்த பெரும்பாலானோர் மீட்கப்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியது.
முன்னதாக, ராவி, சட்லெஜ், செனாப் ஆகிய நதிகளில் ஏற்பட்ட வெள்ளம் 4,100க்கும் மேற்பட்ட கிராமங்களைப் பாதித்துள்ளது. இதனால், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது என்று நிவாரண ஆணையர் நபில் ஜாவேத் கூறினார்.
அதிகாரிகள் 423 நிவாரண முகாம்கள், 512 மருத்துவ வசதிகள், 432 கால்நடை மையங்களை அமைத்து மக்களையும் கால்நடைகளையும் பாதுகாத்து வருகின்றனர். அத்துடன், 1.5 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. நடப்பாண்டில், வெள்ளநீரில் சிக்கி குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாக திரு ஜாவேத் சொன்னார்.

