சீன நீர்மூழ்கிக் கப்பலை விரைவில் பயன்படுத்தத் தயாராகும் பாகிஸ்தான்

2 mins read
8ca0701c-8d6b-4df5-89b9-8b0542eac093
2028ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தானுக்கு எட்டு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கச் சீனா ஒப்பந்தம் செய்துள்ளது.  - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: பாகிஸ்தான் கடற்படை சீனாவிடமிருந்து முதல் முறையாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை வாங்கவுள்ளது. அது 2026ஆம் ஆண்டு முதல் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான தகவலைப் பாகிஸ்தானின் மூத்த ராணுவ அதிகாரி வெளியிட்டார். ஆசிய வட்டாரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் கால்பதிக்கும் திட்டத்திலும் பாகிஸ்தானுக்குச் சீனா உதவிவருகிறது.

2028ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தானுக்கு எட்டு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கச் சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் முதல்படியாக அடுத்த ஆண்டு ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப் பாகிஸ்தானுக்குச் சீனா வழங்கும்.

சீனாவுடனான ஒப்பந்தம் சீராக உள்ளது என்று ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி நவீத் அஷ்ரஃப் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தெரிவித்தார்.

“நீர்மூழ்கிக் கப்பல்களால் பாகிஸ்தானின் கடற்படை பலமாகத் திகழும், அரேபியக் கடலின் வடக்குப் பகுதியிலும் இந்தியக் கடல் பகுதிகளிலும் விழிப்புடன் இருக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.

அப்போது இந்திய ராணுவத்தின் சில போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தச் சீனாவிடமிருந்து பெற்ற போர் விமானங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதையடுத்து தற்போது கடற்படையிலும் சீனாவின் ஆயுதங்களைப் பாகிஸ்தான் வாங்கத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் சீனாவின் ஆயுதங்களைப் பயன்படுத்தியது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுவாக ராணுவ ஆயுதங்களை மேற்கத்திய நாடுகளிடமிருந்துதான் மற்ற நாடுகள் வாங்கும். இப்போது சீனாவின் ஆயுதங்களுக்கு உலக நாடுகள் மத்தியில் கவனம் கிடைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் 6.5 பில்லியன் வெள்ளியாகும்.

டீசல்-மின்சாரச் சக்தியில் இயங்கும் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு பாகிஸ்தானிடம் வழங்கப்படும்.

மீதமுள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்படும். பாகிஸ்தான் கப்பல் கட்டுமானத்தில் முன்னேற இந்த ஏற்பாடு என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்