ஜெருசலம்: மேற்குக்கரையில் அல்ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட அனுமதி வழங்கவுள்ளதாக அங்குச் சில பகுதிகளை ஆளும் பாலஸ்தீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அல்ஜசீரா நிறுவனம் பாலஸ்தீனத்தின் கொள்கைகளில் தலையிடுகிறது, கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுகிறது எனக் கூறி மேற்குக்கரையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் அதன் செயல்பாடுகளுக்குப் பாலஸ்தீன அரசாங்கம் தடைவிதித்தது. தற்போது அந்தத் தடையை நீக்குவதாக அது அறிவித்துள்ளது.
கத்தார் அரசாங்கத்தின் நிதியுதவியால் செயல்படும் அல்ஜசீரா நிறுவனம் தனது சில கொள்கைகளை மாற்ற வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் தடை நீக்கப்படும் என்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், எந்தவிதக் கொள்கைகள் என்பது குறித்த விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.
மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன அரசாங்கம், அல்ஜசீரா நிறுவனம் காஸாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டுகிறது.
காஸாவில் ஃபாடா கட்சியின் ஆட்சியை வீழ்த்தி ஹமாஸ் படையினர் 2007ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகின்றனர். அது மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன அரசாங்கத்திற்குத் தலைவலியை ஏற்படுத்தியது.
மேற்குக்கரையில் அல்ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம் செயல்படத் தடை விதித்தபோது பாலஸ்தீன அரசாங்கத்திற்கு எதிராகச் சில பாலஸ்தீன ஆர்வலர்களும் மனித உரிமைகள் குழுக்களும் கண்டனம் தெரிவித்தனர்.