நியூயார்க்: வாஷிங்டன் பல்கலைக்கழகம், போயிங் நிறுவனத்துடன் உள்ள உறவைத் துண்டிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தரும் போராட்டக்காரர்கள் திங்கட்கிழமை (மே 5) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விமானங்களைத் தயாரிக்கும் போயிங் நிறுவனம் இஸ்ரேலிய ராணுவத்துடன் பல ஒப்பந்தங்கள் செய்துள்ளது. அதைக் கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். இதுகுறித்து தற்போது அமெரிக்க அரசாங்கம் விசாரணை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் நடந்த இச்சம்பவத்தை யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது என்று டிரம்ப் நிர்வாகம் சாடியுள்ளது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த பல்கலைக்கழகத்தையும் அதிகாரிகளையும் டிரம்ப் நிர்வாகம் பாராட்டியது.
தேவைப்பட்டால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் கொள்கைகளை மாற்றிக்கொள்ளவும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசாங்கம்.
கட்டடத்தை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 30 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.