கொலம்பியா பல்கலைக்கழகத்தில் புகுந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

1 mins read
b0ca68d7-e582-43db-ba93-3230003b2a76
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலம்பியா பல்கலைக்கழகப் பட்லர் நூலகத்தில் அத்துமீறி நுழைந்தனர். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க் காவல்துறை அதிகாரிகள், கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தின் முக்கிய பகுதியை ஆக்கிரமித்த பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்களை வியாழக்கிழமை (மே 8) கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கை மூர்க்கத்தனமானது என்று சாடி அறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழகத் தலைவர் கிளேர் ‌‌ஷிப்மன், பட்லர் நூலகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவந்தமாகப் புகுந்ததில் இரண்டு பல்கலைக்கழக பாதுகாவல் அதிகாரிகள் காயமடைந்ததாகக் குறிப்பிட்டார்.

பட்லர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்.
பட்லர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டப்படி நூலகத்துக்குள் நுழைந்ததைக் காண முடிகிறது. டிரம்ப் நிர்வாகம் தடைசெய்த கெஃபியா எனப்படும் ஒருவகை தலைப்பாகையையும் முகமூடியையும் அணிந்திருந்த அவர்கள், நூலகத்தில் இருந்த புத்தக அலமாரிகள்மீது ‘பாலஸ்தீனத்தை விடுதலை செய்’ என்ற வாசகத்தை எழுதினர்.

நியூயார்க் காவல்துறையிடம் உதவிக் கேட்ட திருவாட்டி ‌ஷிப்மன், ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் அல்லர் என்றார்.

காவல்துறை அதிகாரிகள் 70க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்ததாகக் கொலம்பியா ஸ்பெக்டேட்டர் என்ற பல்கலைக்கழக நாளேடு குறிப்பிட்டது.

பொதுப் பாதுகாவல் அதிகாரிகள் வாயிலில் நின்றபடி நூலகத்துக்குள் இருப்போரிடம் பல்கலைக்கழக அடையாள அட்டையைக் காட்டும்படி கூறுவதையும் மற்றொரு காணொளி காட்டுகிறது.

கடந்த மார்ச் மாதம், டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது. ஆர்ப்பாட்டங்களில் முகமூடிகள் அணியக்கூடாது என்பது அவற்றுள் ஒன்று.

நிபந்தனைகளை ஏற்காவிட்டால் பல்கலைக்கழகத்துக்கான நிதியை நிறுத்தப்போவதாக டிரம்ப் நிர்வாகம் எச்சரித்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களில் 70க்கும் அதிகமானோர் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லர் என்று கூறப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களில் 70க்கும் அதிகமானோர் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லர் என்று கூறப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்