இஸ்ரேலின் தாக்குதலில் மாண்ட பாலஸ்தீனர்கள்: காஸா

இஸ்ரேலின் தாக்குதலில் மாண்ட பாலஸ்தீனர்கள்: காஸா

1 mins read
728f2651-4b4f-49b3-9a19-3ee591c84976
உணவை விநியோகம் செய்யும் நிவாரணத் தளங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக மருத்துவர்கள் கூறினர். - படம்: ஏஎஃப்பி

காய்ரோ - இஸ்ரேலின் துப்பாக்கிச்சூடு, ஆகாயத் தாக்குதல்களில் குறைந்தது 12 பாலஸ்தீனர்கள் காஸாவில் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் குறைந்தது ஐவர் அமெரிக்க ஆதரவுகொண்ட காஸா மனிதநேய அறக்கட்டளை நடத்தி வரும் இரண்டு நிவாரணத் தளங்களுக்கு அருகில் இருந்தனர்.

மத்திய காஸா பகுதியில் உள்ள அல்-ஆவ்டா மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், இஸ்ரேலியர்களின் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டனர் என்றும் பலர் காயமுற்றனர் என்றும் கூறினர். தெற்கில் உள்ள ராஃபா நிவாரணத் தளத்திற்குச் சென்றுகொண்டிருந்த மேலும் இருவர் வழியில் கொல்லப்பட்டனர் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

காஸாவுக்கு வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரில் நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலில் ஏழு பேர் மாண்டதாக மருத்துவர்கள் கூறினர். இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

காஸா மனிதநேய அறக்கட்டளை மே மாத இறுதியில் காஸாவில் உணவுப் பொருள்களை விநியோகம் செய்யத் தொடங்கியது. நிவாரணப் பொருள்கள்மீது கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இஸ்ரேல் நீக்கியது. உணவை பெறும் முயற்சியில் பாலஸ்தீனர்கள் கிட்டத்தட்ட அனுதினமும் நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டால் கொல்லப்படுகின்றனர்.

இஸ்ரேலின் புதிய விநியோகத் திட்டத்தை ஐக்கிய நாட்டு நிறுவனம் நிராகரித்துள்ளது. அது போதுமான அளவு இல்லை, ஆபத்தானது, மனிதாபிமான கோட்பாடுகளை மீறுகிறது என நிறுவனம் குறைகூறியது.

குறிப்புச் சொற்கள்