பனாமா சிட்டி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பனாமா கால்வாயை மீண்டும் கைப்பற்றுவதாக பலமுறை மிரட்டல் விடுத்தும் கூட அமெரிக்காவுடன் “மரியாதைக்குரிய” உறவைப் பேண முடியும் என்று பனாமா நம்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜேவியர் மார்டினெஸ்-அச்சா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தின் வருகைக்கு முன்னதாக அவர் இக்கருத்தைக் கூறியுள்ளார். திரு டிரம்ப்பின் அச்சுறுத்தல்களும் கால்வாயின் நடவடிக்கைகளில் சீனாவின் தலையீடு இருப்பதாக அவர் கூறிவரும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் மிக அவசரமான பயணமாக இது அமைகிறது.
ஏப்ரல் 4 அன்று அமெரிக்க துணை அமைச்சர் கிறிஸ்டஃபர் லாண்டாவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் பற்றி முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட, திரு மார்டினெஸ்-அச்சா, “சட்டவிரோதக் குடியேற்றம், திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் பற்றி விவாதித்தோம். அது ஒரு சுமூகமான, ஆக்கபூர்வமான உரையாடலாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.
சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதில் பனாமா ஒத்துழைத்ததற்கு திரு லாண்டாவ் நன்றி தெரிவித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது.
அமெரிக்காவும் சீனாவும் பனாமா கால்வாயை மிகப் பெரிய அளவில் பயன்படுத்தும் நாடுகள். அவை உலகளாவிய கடற்துறை வணிகத்தில் ஐந்து விழுக்காட்டைக் கையாளுகின்றன. இக்கால்வாய் 1914ஆம் ஆண்டில் அமெரிக்காவால் திறந்து வைக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு முதல் இது பனாமாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.