நஜிப் வீட்டுச் சிறை: மன்னிப்பு வாரியக் குறிப்புகள் வெளியிடப்படும்

நஜிப் வீட்டுச் சிறை: மன்னிப்பு வாரியக் குறிப்புகள் வெளியிடப்படும்

படம்: ஏஎஃப்பி

22 Nov 2026 - 5:26 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு வீட்டுச் சிறை வழங்கப்பட்டதற்கான பொது மன்னிப்பு வாரியத்தின் குறிப்புகள் தலைமை சட்ட அதிகாரியின் பதில் நடவடிக்கைக்காக வெளியிடப்படும்.

மலேசிய வழக்கறிஞர்கள் சங்கம் (பார் கவுன்ஸில்), அந்நாட்டு தலைமை சட்ட அதிகாரியின் அலுவலகத்துக்கு (ஏஜிசி) அனுப்பியுள்ள நீதித்துறை மறுஆய்வு மனுவுக்கு பதில் அறிக்கை தயாரிக்க அது உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுதோன் இஸ்மாயில் ஞாயிற்றுக்கிழமை (நம்பர் 22) தெரிவித்தார்.

அக்குறிப்புகள் வெளியிடப்படுவது அவசியம் என்ற அமைச்சர் அதிலுள்ள முக்கிய விவரங்களைக் கொண்டு அரசாங்கம் எதிர் ஆவணங்களைத் தயாரிக்க வேண்டியுள்ளது எனவும் விளக்கமளித்தார்.

முன்னாள் பிரதமருக்கு வீட்டுச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் சங்கம் மறுஆய்வு விண்ணப்பம் செய்துள்ளது. அதனால் அதற்கு அரசாங்கம், தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்தின் வழியாக எதிர் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

மன்னிப்பு வாரியத்தின் விசாரணைகளில் இடம்பெற்ற முக்கியத் தரவுகள் அங்கு பதிவுசெய்யப்பட்டதால் அரசாங்கப் பதில் ஆவணங்களுக்கு அவை தேவைப்படுகின்றன.

“ஆகவே அந்த ஆவணங்களைப் பொதுவில் வெளியிட்டால்தான் தலைமை சட்ட அதிகாரி அதைக்கொண்டு செயல்பட ஏதுவாக அமையும்,” என்று அன்றைய தினம் காலையில் மெர்டேக்கா சதுக்கத்தில் நடந்த மெதுவோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த ஆவணங்கள் ரகசியமாகவே இருந்திருக்க வேண்டும் என்பதற்கும் யார் அவற்றை வெளியிட்டனர் என்ற கேள்விக்கும் அமைச்சர் பதிலளிக்கவில்லை.

அதற்கான காரணத்தை வெளியிடும் நிலையில் அரசாங்கம் இல்லை என்று அமைச்சர் கூறினார்.

அதற்கு முன்பாக தலைமை சட்ட அதிகாரி முகம்மது டசுக்கி மொக்தார், பிரதமர் அலுவலகத்தின் கூட்டரசுப் பிரதேசங்களுக்கான அதிகாரி ஹக்கா இயோ இருவரும் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட வீட்டுச் சிறைச் சலுகையை எதிர்த்திருந்தனர். அவர்களின் முடிவு கூட்டரசுப் பிரதேசங்களின் மன்னிப்பு வாரியத்தின் விசாரணை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டதாகும் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதுபோன்ற ஆவணத்தை பகிர்ந்தார். அதனால் மாமன்னர் வழங்கிய மன்னிப்பு பொது வெளியில் இயல்பாகப் பகிரப்பட்டது பலரது கவனத்தை ஈர்த்தது.

குறிப்புச் சொற்கள்