சாபா, சரவாக் மாநிலங்களுக்கான நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்படும்: பிரதமர் அன்வார்

சாபா, சரவாக் மாநிலங்களுக்கான நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்படும்: பிரதமர் அன்வார்

2 mins read
71493713-ded1-4fb3-9964-185609d38649
பிரதமர் அன்வாரின் (நடுவில்) செய்தியாளர் சந்திப்பின்போது சாபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் (இடது), சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபெங் ஆகியோரும் உடனிருந்தனர். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: சாபா, சரவாக் ஆகிய மாநிலங்களுக்கு நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இரு மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் உயர்த்தப்படுவதற்காக அமைச்சரவையின் கொள்கை அளவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று திரு அன்வார் கூறினார்.

“சாபா, சரவாக் மாநிலங்களுக்கான நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது, இருப்பினும் கூடுதல் தொகுதிகளின் துல்லியமான எண்ணிக்கையும் முறையும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசிய ஒப்பந்தம் 1963 (MA63) நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தொகுதி எண்ணிக்கையின் அதிகரிப்பானது இந்த இரு மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

பிரதமர் அன்வாரின் செய்தியாளர் சந்திப்பின்போது சாபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர், சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபெங் ஆகியோரும் உடனிருந்தனர்.

தீபகற்ப மலேசியாவிலும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாகவும், கூடுதல் தொகுதிகளின் எண்ணிக்கை,நடைமுறைகள் குறித்த பேச்சுகளைத் தொடங்குமாறு தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த முடிவு குறித்துத் தீபகற்ப மலேசியாவின் அரசியல் கட்சிகளுடன் இரு மாநிலங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

1963ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மலேசிய ஒப்பந்தத்தின்படி, சிங்கப்பூர், சாபா, சரவாக் , மலாயா இணைந்து கூட்டமைப்பை உருவாக்கின.

கூட்டரசு அரசியலமைப்பில் திருத்தம் செய்யத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மலாயா தன்னிச்சையாகப் பெறுவதைத் தடுக்க, மூன்று பகுதிகளும் இணைந்து நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளைப் பெற்றிருந்தன.

1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு அந்த விகிதம் குறைந்தது.

தற்போதைய 222 நாடாளுமன்றத் தொகுதிகளில், சாபா 25 தொகுதிகளையும், சரவாக் 31 தொகுதிகளையும் கொண்டுள்ளன.

இதன் மூலம் இரு மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விழுக்காடு தொகுதிகள் மட்டுமே உள்ளன; எஞ்சிய 75 விழுக்காடு தொகுதிகள் தீபகற்ப மலேசியாவிடம் உள்ளன.

சாபா சரவாக் மாநிலங்கள் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 விழுக்காடு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கோரி வருகின்றன. இதற்காக அந்த மாநிலங்களுக்கு மேலும் கிட்டத்தட்ட 18 தொகுதிகள் தேவைப்படும்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅன்வார்சாபாசரவாக்தேர்தல்