ஜப்பானிய அமைச்சுகளின் இணையத்தளங்கள் பகுதி முடக்கம்

ஜப்பானிய அமைச்சுகளின் இணையத்தளங்கள் பகுதி முடக்கம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Oct 2026 - 4:55 pm

2 mins read

தோக்கியோ: உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘பிஎச்பி’ கணினி நிரலாக்க மொழியில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களது இணையத்தளங்களைப் பகுதி முடக்கம் செய்துள்ளதாக ஜப்பானிய அமைச்சுகள் அறிவித்துள்ளன.

அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்பட்டபோதிலும், இந்த பிஎச்பி தொழில்நுட்பக் கோளாறுகளால் அரசாங்க இணையப்பக்கங்களுக்கு இதுவரை எவ்விதப் பாதிப்பும் அல்லது சேதமும் ஏற்படவில்லை என்று ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேவேளையில், வியாழக்கிழமை (அக்டோபர் 22) நிலவரப்படி, அந்த நிரலாக்க மொழியில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, எம்யுஎஃப்ஜி வங்கி, ‘ஜேஆர் வெஸ்ட்’ ஆகிய முன்னணி நிறுவனங்கள் தங்களது கணினி அமைப்புகளில் அவசரப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளன.

முதலீட்டு நம்பிக்கை கணக்குகளை இணையம் வழியாகத் தொடங்கும் சேவை உள்ளிட்ட சில முக்கியமான சேவைகள் தற்காலிகமாகச் செயல்படாது என்று ஜப்பானின் முன்னணி வங்கியான எம்யுஎஃப்ஜி தெரிவித்துள்ளது. இதனிடையே, வெஸ்ட் ஜப்பான் ரயில்வே நிறுவனம் தனது குழுமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 60 இணையத்தளங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.

உணவக நிறுவனமான ‘ஜென்ஷோ ஹோல்டிங்ஸ்’, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது ‘சுகியா’ மாட்டிறைச்சி உணவகச் சங்கிலி, ‘ஹாமா-சுஷி’ சுஷி உணவகச் சங்கிலிக்கான செயலிச் சேவைகளைப் புதன்கிழமை இரவு முதல் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் புதன்கிழமையன்று கண்டறியப்பட்டு எச்சரிக்கப்பட்ட அந்தப் பாதுகாப்புக் குறைபாடுகள், இணையத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் நிறுவனங்களும் தங்களது இணையத்தளங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்இணையப் பாதுகாப்புஅமைச்சுமுடக்கம்