கோலாலம்பூர்: பாஸ் கட்சி, மலேசியாவின் எதிர்த்தரப்புக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலின் தலைமைத்துவத்தை ஏற்கவிருக்கிறது. பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அதனைத் தெரிவித்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து சென்ற ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி திரு முஹைதின் யாசின் பதவி விலகியதைத் தொடர்ந்து திரு ஹாடி செய்தியாளர்களிடம் பேசினார்.
கூட்டணித் தலைமைத்துவம் குறித்தும் யாரைத் தலைவராகத் தெரிவுசெய்வது என்பது பற்றியும் விரைவில் விவாதிக்கப்படும் என்று திரு ஹாடி கூறினார். பேச்சு அடுத்த வாரம் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாஸ் கட்சி, அதன் வேட்பாளரை முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி, மலேசிய நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஆக அதிக இடங்களைக் கொண்டுள்ளது. மன்றத்தில் அதற்கு 67 இடங்கள் உள்ளன. பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் 79 இடங்களைவிட அது சற்றுக் குறைவு.
பெரிக்கத்தான் நேஷனலை வழிநடத்தப்போவது யார் என்பதை அறிய ஆர்வலர்கள் நிலைமையை அணுக்கமாக கவனித்து வருகின்றனர்.
அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் அன்வாருக்கு எதிராக நிற்கப்போகும் தலைவர் யார் என்பதனால் அவர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்றாக வேண்டும்.
78 வயது முஹைதின் தற்போது லண்டனில் இருக்கிறார். அவர் அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெர்சத்துக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான திரு முஹைதின் அண்மையில் எதிர்த்தரப்புக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் சிலரும் அவரவர் பதவிகளைத் துறந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய தலைவரின் தெரிவு குறித்தும் 78 வயது திரு ஹாடி பேசினார்.
“எனக்கு உடல்நிலை நன்றாக இல்லை. தலைவர் பொறுப்புக்கு யாரைத் தெரிவுசெய்யலாம் என்பதைக் கட்சிக்குள் பேசி விவாதிப்போம். ஏராளமானோர் இருக்கின்றனர். அரசியல்வாதிகள் உள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்களும் இருக்கிறார்கள்,” என்றார் அவர்.
பெரிக்கத்தான் நேஷனலின் தலைமைத்துவத்தைப் பாஸ் கைப்பற்றுவதால், கூட்டணிக் கட்சிகளுடன் பிரச்சினை வராது என்று திரு ஹாடி சொன்னார். அவற்றுடன் உறவு நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பாஸ் கட்சி, அம்னோவுடனும் நல்லுறவைக் கட்டிக்காப்பதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஆக அதிக இடங்களைக் கொண்டுள்ள கட்சியும் பாஸ்தான். அதற்கு மன்றத்தில் 43 இடங்கள் இருக்கின்றன.

