கோலாலம்பூர்: பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவை ரத்து செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் மலாக்கா மாநிலத் தேர்தலுக்குத் தயாராகவும் கூட்டணியில் செயல்படும் கூட்டணிக் கட்சிகளுடன் பாஸ் கட்சி இணைந்து செயல்படும்.
மலேசிய சங்கங்களின் பதிவாளர் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 20) வெளியிட்ட கூட்டணிப் பதிவு ரத்து அறிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதாகப் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.
மலேசிய சங்கங்களின் பதிவாளரது இந்தத் தீர்மானம், நீதிமன்றத் தீர்ப்பை முன்கூட்டியே முடக்கும் வகையிலும் கூட்டரசு அரசியலமைப்பின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்று பாஸ் கூறியுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் அதிகரித்து வரும் அச்ச உணர்வையே இந்நடவடிக்கை வெளிப்படுத்துவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் நிர்வாகமும் மேலாண்மையும் கூட்டணியின் அரசியலமைப்புக்கு உட்பட்டு, சீரான முறையில் நடத்தப்பட்டு வந்துள்ளதாக பாஸ் சுட்டிக்காட்டியது.
கூட்டணியிலிருந்து விலகிச் சென்ற ஒரு கட்சியைத் தவிர, பெரிக்காத்தான் நேஷனலில் அங்கம் வகிக்கும் ஏனைய கூட்டணிக் கட்சிகளிடையேயான உறவு தொடர்ந்து வலுவாக உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மற்றும் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உட்பட, அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் கூட்டணியுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தே எடுக்கப்படும் என்று அப்துல் ஹாடி தெரிவித்தார்.
