இணைய ஊடுருவலால் பயணிகளின் விவரங்கள் கசிந்திருக்கலாம்: மலேசியா ஏர்லைன்ஸ்

இணைய ஊடுருவலால் பயணிகளின் விவரங்கள் கசிந்திருக்கலாம்: மலேசியா ஏர்லைன்ஸ்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

01 Nov 2026 - 1:23 pm

1 mins read

கோலாலம்பூர்: முன்பதிவுத் தொழில்நுட்பச் சேவை வழங்கும் நிறுவனமான அமடேஸ் (Amadeus) இணைய ஊடுருவலால் சில பயணிகளின் தரவுகள் கசிந்திருக்கலாம் என்று மலேசியா ஏர்லைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) தெரிவித்துள்ளது.

‘அமடேஸ் ஐடி’ குழுமத்தின் மின்னியல் கட்டமைப்பு ஊடுருவப்பட்டதில் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்ததாக கேத்தே பசிபிக், ஜப்பான் ஏர்லைன்ஸ், தென் கொரியாவின் ஆசியானா ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் அறிவித்தன.

கடந்த 2023 ஆகஸ்ட் முதல் 2026 செப்டம்பர் வரையிலான வாடிக்கையாளர் விவரங்கள் கசிந்திருக்கக்கூடும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் அறிக்கை தெரிவித்தது.

இது தொடர்பாக அமடேஸ் நிறுவனத்துடனும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடனும் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகவும், பாதிப்பின் தீவிரத்தை மதிப்பீடு செய்துவருவதாகவும் விமான நிறுவனம் கூறியது.

எனினும், மலேசியா ஏர்லைன்சின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் எவ்வித ஊடுருவலுக்கும் உள்ளாகவில்லை என்றும் பயணிகளின் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

தரவுக்கசிவை அமடேஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், எத்தனை பயணிகளின் தரவுகள் கசிந்தன என்று அது தெரிவிக்கவில்லை.

அண்மையில், கேத்தே பசிபிக் விமான நிறுவனத்தில் 53,000 முன்பதிவு குறித்த விவரங்களும், ஜப்பான் ஏர்லைன்சில் 92,000 வாடிக்கையாளர்களின் விவரங்களும் கசிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்