ஜோகூர் பாரு: மாணவர் முகம்மது அரிஃப் சாஆடன், கேடிஎம்பி எனும் கிரேத்தாப்பி தானா மலாயு பெர்ஹாடின் சதர்ன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதன்முறையாகப் பயணம் செய்தது செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 30). அது, அந்த ரயில் இறுதிமுறையாகச் சேவை வழங்குவதற்கு ஒரு நாள் முன்பு.
16 வயது முகம்மது அரிஃப், எப்போதும் அந்த ரயில் சேவையைப் பயன்படுத்த விரும்பியதாகவும் ஆனால் இதற்கு முன்னர் அவ்வாறு செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் இருந்ததாகவும் சொன்னார்.
“நானும் எனது நண்பரும் எங்கள் தோழர்களைப் பார்ப்பதற்காக கெமாஸ் செல்ல ரயில் சேவையைப் பயன்படுத்த முடிவுசெய்தோம். ரயிலின் சேவை நேரம் எங்கள் திட்டத்துடன் ஒத்துப்போனதால் அவ்வாறு செய்தோம்.
“இது இயல்பாக நடந்த ஒன்று. வேறு விதமான போக்குவரத்தைப் பயன்படுத்த நாங்கள் முடிவுசெய்திருந்தால் இந்த அனுபவம் கிடைக்காமல் போயிருக்கக்கூடும். அதற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்,” என்றார் முகம்மது அரிஃப். மலேசியாவின் ஜேபி சென்ட்ரலில் அவர் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
கேடிஎம்பி, திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கெமாஸ்-ஜேபி சென்ட்ரல்-கெமாஸ் வழித்தடத்தில் ஒன்பது ஆண்டாகச் செயல்பட்ட தனது சதர்ன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஜனவரி முதல் தேதியிலிருந்து வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்தது.
தென்புறத் தடத்தில் சேவையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கேடிஎம் சதர்ன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. கெமாஸ்-ஜோகூர் பாரு மின் இருவழித்தடத் திட்டத்தின் உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெறும் வேளையில் அந்த முடிவு வந்துள்ளது.
ரயில் சேவை முடியும் முன்னர், அதில் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்ற இன்னொருவர் 31 வயது விற்பனை நிர்வாகி பெனனெட் சாய். அவர் கூலாய்க்குச் சென்றார்.
“நான் இந்த ரயில் சேவையை அரிதாகவே பயன்படுத்துவேன். கூலாயில் வேலை இருந்தது. அதனால் இந்த ரயிலில் போக முடிவுசெய்தேன்.
தொடர்புடைய செய்திகள்
“இதற்கு முன்னர் மூன்று முறைதான் இந்த ரயிலில் சென்றிருக்கிறேன். இந்த ரயில் சேவை வரலாறாகும் முன்னர் மற்றொரு முறை இதில் செல்வது மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் சிங்கப்பூரில் பணியாற்றிவரும் திரு சாய்.
சிங்கப்பூரின் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவரான பி ஷாலினி, இந்த ரயில் சேவையால் பலன்பெற்றிருப்பதாகக் கூறினார்.
“என் சொந்த ஊரான குலுவாங்கிற்கு எந்தச் சிக்கலுமின்றிப் போய்வர இது வசதியாக இருந்தது. ஆறு மாதத்திற்கு முன்னர் சிங்கப்பூரில் வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து இந்த ரயில் சேவையைப் பயன்படுத்திவருகிறேன். என் வாழ்க்கையை இது எளிதாக்கியது,” என்றார் அவர்.
எதிர்காலத்தில் மின் ரயில் சேவையைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார் திருவாட்டி ஷாலினி.

