கோலாலம்பூர்: அமைதிக்கான கூட்டுக் கடப்பாட்டில் கம்போடியாவும் தாய்லாந்தும் கோலாலம்பூரின் 47வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின்போது இணைந்துள்ளன.
கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டும் தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விரகுல்லும் இதற்கான ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) கையெழுத்திட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட எல்லைப்பகுதிகளிலிருந்து கனரக ஆயுதங்களை அகற்ற இரண்டு தரப்பினருமே முன்னதாக ஒப்புக்கொண்டனர்.
தாய்லாந்தின் முன்னாள் அரசியார் சிரிகிட் கிட்டியகா காலமானதால் தாய்லாந்துப் பிரதமர் அனுட்டினுக்கான நேரம் உச்சநிலைக் கூட்டத்தில் சுருக்கப்பட்டது.
அதனால், திட்டமிடப்பட்ட நேரத்திற்குச் சில மணி நேரம் முன்னதாகக் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடந்தேறியது.
கம்போடியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நிலவிய பதற்றம் இவ்வாண்டின் முற்பகுதியில் ராணுவ மோதலாக உருவெடுத்தது.
கடந்த பத்து ஆண்டுகாலத்தில் நடந்த ஆக மோசமான இந்த மோதலில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மலேசியாவின் அரசதந்திர தலையீட்டுக்கும் சண்டையை நிறுத்தாவிட்டால் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தடுக்கப்போவதாக திரு டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கும் பிறகு ஜூலை 28ல் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகளும் அனைத்துப் பகைமைகளையும் நிறுத்திவிட்டு, நல்ல உறவுகளைக் கட்டியெழுப்ப ஒப்புக்கொண்டுள்ளதாகத் திரு டிரம்ப் கையெழுத்து நிகழ்ச்சிக்கு முன்னர் கூறினார்.
மேலும் அவர், கம்போடியாவைச் சேர்ந்த 18 போர்க் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் அமைதி நிலவுவதை உறுதிசெய்ய மலேசியா உட்பட ஆசியான் நாடுகளைச் சேர்ந்தோர் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
திரு அனுட்டின், திரு ஹுன் மானெட், திரு அன்வார் ஆகியோர் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியவர்கள் எனத் திரு டிரம்ப் தெரிவித்தார். “மனித குலத்திற்காக இவர்கள் அதிசயமான வேலையைச் செய்திருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார். “ஜூலை 28 அன்று மலேசியாவில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதிலிருந்து நாங்கள் நீண்ட தூரம் வந்துவிட்டோம், அதன்பிறகான விவாதங்கள் இந்த முக்கியமான விளைவுக்கு வழிவகுத்தன,” என்று திரு அனுட்டின் கூறினார்.
கூட்டு உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட எந்த அம்சமும் தாய்லாந்துக்குப் பாதகமாக இருக்காது என்பதை தாய்லாந்தின் மக்களுக்கு உறுதியளிக்க, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) காலை கோலாலம்பூரில் இருந்து திரு அனுட்டின் ஒரு பேஸ்புக் நேரடிக் காணொளியில் பங்கேற்றார். அதே நேரத்தில், வட்டாரச் சலுகைகள் பற்றிய வதந்திகளை நிராகரித்து, பொதுமக்களின் ஆதரவையும் அவர் கோரினார்.

