டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சு நடத்துவது அர்த்தமற்றது என்று ஈரான் கூறியிருக்கிறது.
லெபனானை இஸ்ரேல் புதன்கிழமை (ஏப்ரல் 8) கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்து, டெஹ்ரான் அவ்வாறு தெரிவித்தது. வாஷிங்டனுடன் நிரந்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதன் தொடர்பில் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என்று அது சொன்னது.
ஈரான் சார்பில் சமரசப் பேச்சை முன்னெடுக்கும் நாடாளுமன்றப் பேச்சாளர் முகம்மது பாகெர் கலிபாஃப், உடன்பாட்டிற்கான பல நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்கெனவே மீறிவிட்டதாகக் குறிப்பிட்டார். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா குழுவின்மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் நடத்துவதை அவர் சுட்டினார்.
சண்டையை இரண்டு வாரத்திற்கு நிறுத்திவைக்க டெஹ்ரானும் வாஷிங்டனும் இணங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) கூறியிருந்தார்.
வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 11) அமைதிப் பேச்சு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பும் முரணான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஆயினும் அதுவரை சண்டை நிறுத்தம் நடப்பிலிருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் இரண்டு வாரச் சண்டை நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறுகின்றன. தாக்குதல்கள் தொடரும் என்கிறார் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு.

