அமைதி நடைப்பயணம்: 3,700 கிலோ மீட்டர் நடந்து வாஷிங்டன் அடைந்த புத்த பிக்குகள்

அமைதி நடைப்பயணம்: 3,700 கிலோ மீட்டர் நடந்து வாஷிங்டன் அடைந்த புத்த பிக்குகள்

2 mins read
852b459c-3f32-4c12-bd14-0b9b9a1f745e
அமைதி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த ஆன்மீகத் தலைவரான பிக்கு பன்னன்காரா (இடது) தலைமையில் 20க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் கடுங்குளிரில் நீண்ட தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்காவிலும் உலகெங்கும் உள்ள மற்ற நாடுகளிலும் அமைதி, கணிவன்பு, இரக்க குணம் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 20க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அமைதி நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் அவர்களது நீண்ட தூர நடைப்பயணம் தொடங்கியது. அமெரிக்காவின் ஒன்பது மாநிலங்களுக்கு அவர்கள் நடந்தே செல்கின்றனர்.

புத்த பிக்குகளின் பயணப் பாதை சவால்மிக்கதாக இருந்தபோதும் அவர்கள் தங்கள் இலக்கில் குறியாக இருந்தனர்.

கடுங்குளிராலும் அவர்களது மனதை மாற்ற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில நேரங்களில் அவர்கள் காலணிகள் அணியாமல் வெறுங்காலுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏறத்தாழ 3,700 கிலோ மீட்டர் தூர நடைப்பயணத்துக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 10) அவர்கள் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை அடைந்தனர்.

அவர்களை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

அமைதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் புத்த பிக்குகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆரவாரம் செய்தனர்.

‘அலோகா’ என்று அழைக்கப்படும் இந்தியாவைச் சேர்ந்த மீட்புப் பணிகளில் ஈடுபடும் நாயும் புத்த பிக்குகளுடன் இந்த அமைதி நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் அது பிரபலமடைந்துள்ளது.

‘அமைதி நாய்’ என்று அதற்குச் செல்லமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மிகக் கடுமையான குடிநுழைவுக் கொள்கைகள் காரணமாக அந்நாட்டின் சில நகரங்களில் குடிநுழைவு அதிகாரிகளும் தேசியப் பாதுகாப்புப் படையினரும் மிகக் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மிகக் கடுமையான முறையில் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவர்களது செயல்பாடுகளின் காரணமாக அமெரிக்கக் குடிமக்கள் சிலரும் குடியேறிகள் சிலரும் மாண்டுவிட்டனர்.

“ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நாங்கள் நடைப்பயணம் மேற்கொள்ளவில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் அமைதி நிலை உள்ளது. அதைத் தட்டி எழுப்பவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்று அமைதிப் பயணத்தில் ஈடுபடும் புத்த பிக்குகளின் ஆன்மீகத் தலைவரான பிக்கு பன்னன்காரா தெரிவித்தார்.

அவர் தலைமையில் இந்த நடைப்பயணம் நடைபெறுகிறது.

“அமைதி நடைப்பயணம் மிகவும் எளிமையானது. இருப்பினும் ஒற்றுமை, கணிவன்பு ஆகியவை நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்குகிறது என்ற அர்த்தமுள்ள நினைவூட்டலை முன்வைக்கிறது. நம்மிடமிருந்து தொடங்கும் அமைதி எனும் ஒளி, நமது குடும்பங்கள், சமூகங்கள், உலகளாவிய சமுதாயம் ஆகியவை மீது வீசக்கூடும்,” என்று பிக்கு பன்னன்காரா கூறினார்.

அமைதி நடைப்பயணம் மேற்கொள்ளும் புத்த பிக்குகள் பிப்ரவரி 10, 11ஆம் தேதிகளில் வாஷிங்டனில் இருப்பர். பிப்ரவரி 12ஆம் தேதியன்று மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள அன்னாபொலிஸ் நகரில் அவர்களது பயணம் நிறைவடையும்.

குறிப்புச் சொற்கள்