தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த தொடர் நிதி உதவி: பினாங்கு முதல்வர் அறிவிப்பு

தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த தொடர் நிதி உதவி: பினாங்கு முதல்வர் அறிவிப்பு

2 mins read
cfe73459-110f-4dc8-9340-a0aeba6febab
தமிழ்ப் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றம் கண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: இணையம்

ஜார்ஜ் டவுன்: மாநிலத்தில் உள்ள தமிழ் மொழிப் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை பினாங்கு அரசாங்கம் படிப்படியாக மேம்படுத்தி வந்து உள்ளது.

அதற்காக அந்தப் பள்ளி ஒவ்வொன்றுக்கும் 70,000 ரிங்கிட் முதல் 80,000 ரிங்கிட் வரை ஒதுப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பினாங்கில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் தொடர்ந்த முன்னேற்றம் காண்பதை உறுதிசெய்யும் நோக்குடன் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் முயன்று வருவதாக முதல்வர் சோவ் கோன் இயோவ் தெரிவித்து உள்ளார்.

“ஆண்டுதோறும் தமிழ்மொழிக்கு பினாங்கு மாநில அரசு வழங்கும் நிதி உதவி தொடரும் என்று வலியுறுத்துகிறேன்.

“குறிப்பாக, தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் ஏறத்தாழ 15 ஆண்டு காலம் நடைமுறைப்படுத்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் பலனளித்து உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் முன்னேற்றம் கண்டு வருவதைக் காண்கிறோம்.

“இருப்பினும், நிதி உதவி இன்னும் போதவில்லை என்று எக்ஸ்கோ (Exco) உறுப்பினர் எஸ். சுந்தரராஜு கூறுகிறார். தமிழ்ப் பள்ளிகள் பலனடைய நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அவர் என்னிடம் வலியுறுத்தி உள்ளார்,” என்று முதல்வர் சோவ் தெரிவித்து உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) நடைபெற்ற பினாங்கு தமிழாசிரியர் அனைத்துலக மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

தமிழ்ப் பள்ளிகள், தமிழ் பாலர் பள்ளிகள், பஞ்சாபி பள்ளிகள், தமிழ்ப் பள்ளிகள் குழு சிறப்பு நிதி ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு பினாங்கு மாநில அரசாங்கம் 2.39 மில்லியன் சிறப்பு உதவி நிதி வழங்கியதாக நம்பப்படுகிறது.

மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதல்வர் சோவ், தமிழ் மொழியை வாயாரப் புகழ்ந்தார்.

“பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் கலாசாரம், வரலாறு மற்றும் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய பாரம்பரியம் மிக்க மொழி தமிழ்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்