தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டத்தில் திளைத்துக் களித்து உற்சாகத்தில் ததும்பி நிற்கிறது மலேசியாவின் பினாங்கு நகரம். சமயத் திருவிழா என்பதைத் தாண்டி, ஒட்டுமொத்த நகரமும் இந்தப் பெருவிழாவை ஒற்றுமையாய்க் கொண்டாடுகிறது. இடைவிடாமல் மக்களிடையே பக்திப் பரவசம் உச்சம் தொடுகிறது.
மலைகளுக்கும் அலைகளுக்கும் நடுவே இயற்கையின் கலையாய்த் திகழும் பினாங்கில் இப்போது எங்குப் பார்த்தாலும் தலைகள். இம்முறை திருவிழாவைக் காண ஏறக்குறைய ஒரு மில்லியன் பேர் பினாங்கில் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பினாங்கிற்கு வருகிறார்கள். அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் வசிக்கும் 52 வயது திரு முத்துராமன் சோலையப்பன் மனைவி ராஜேஸ்வரியுடன் தைப்பூசத்திற்காகப் பினாங்கு வந்துள்ளார்.
“என் அப்பாவுக்கு 83 வயதாகிறது. அம்மாவுடன் பினாங்குத் தைப்பூசத்தைக் காண வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அம்மா நடக்கச் சிரமப்படுவார். அதனால் இந்தியாவிற்குச் சென்று இருவரையும் அழைத்து வந்தேன். அவர்கள் திருவிழாவைக் கண்டு ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்றார் திரு முத்துராமன்.
திருவிழாவைப் பார்க்கப் பினாங்கிற்கு வந்த இன்னொருவர் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த முருக பக்தர் 58 வயது முனைவர் செந்தில்குமார்.
“பல நாடுகளுக்கும் சென்று முருகனைத் தைப்பூசத்தின்போது பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். மற்ற நாடுகளிலிருந்தும் என் நண்பர்கள் குடுப்பத்தோடு வந்திருக்கிறார்கள். அனைவரோடும் சேர்ந்து ஆலயங்களுக்குச் செல்வது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது,” என்றார் முனைவர் செந்தில்.
சிங்கப்பூரிலிருந்தும் அநேகர் பினாங்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் 59 வயது திரு இளவரசு சோமசுந்தரம்.
“மனைவி பால் குடம் எடுக்கிறார். அக்காவின் மகன் காவடி எடுக்கிறார். இருவருக்கும் ஆதரவு தர வேண்டும் என்று தோன்றியது. இங்கும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் ஆர்வத்தோடு வந்திருக்கிறேன்,” என்றார் திரு சோமசுந்தரம்.
தொடர்புடைய செய்திகள்
பினாங்கில் ஐந்து நாள் கோலாகலமாக இடம்பெறுகிறது தைப்பூசத் திருவிழா.
முதல் நாள், வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோயில் வீட்டில் கோயில் காவடிகளும் சொந்தக் காவடிகளும் கட்டப்பட்டன. மொத்தம் 90 நகரத்தார் காவடிகள். பிற்பகல் 2 மணிக்குக் காவடிப் பொங்கல் வைக்கப்பட்டு, சொம்பில் சர்க்கரை நிரப்பப்பட்டு, அது காவடியுடன் இணைக்கப்பட்டது. காவடிப் பூசைக்குப் பிறகு இரவு கோயில்வீட்டில் வீற்றிருக்கும் தண்டாயுதபாணியை ஆயிரக்கணக்கானோர் வழிபட்டுச்சென்றனர்.
இரண்டாம் நாள் சனிக்கிழமை விடிகாலை , வேல் தெய்வமாக நின்று ஒளிவீசத் தங்க ரதம், குவீன்ஸ் ஸ்திரீட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, நகரத்தார் காவடிகள் முன்செல்லக் கோயில் வீட்டிலிருந்து காலை 7 மணியளவில் உற்சவமூர்த்தி வீற்றிருக்க வெள்ளி ரதம் புறப்பட்டது.
காவடிகள் பிற்பகல் ஒரு மணி வாக்கில் டத்தோ கிராமட் சிவன் கோயிலைச் சென்றடைந்தன.
ரதங்களும் காவடிகளும் சென்ற சாலைகளில் ஆங்காங்கே நூற்றுக் கணக்கில் தேங்காய்கள் குவிக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் ஆர்வத்தோடு அவற்றை உடைத்து ஆரவாரம் செய்தனர். உடைந்த தேங்காய்களைத் தொண்டூழியர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். எல்லாம் சீராக நடைபெறுவதைக் காவல் துறையினர் உறுதி செய்தனர்.
நகரெங்கும் ஒலிபெருக்கியில் முழங்கிய முருகன் திருப்பாடல்கள், பக்தர்களுக்குப் பரவசமூட்டின. வழியெங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் இலவச உணவும் பானங்களும் வழங்கப்பட்டன.
மாலை ஐந்து மணியளவில் காவடிகள் சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு வாட்டர்ஃபால் வட்டாரத்தில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் தண்ணீர்மலைக் கோயிலுக்குச் சென்றுசேர்ந்தன.
பின்னர் நள்ளிரவுவாக்கில் தங்க ரதம் மலைக்கோயில் பால தண்டாயுதபாணி வளாகத்தையும் வெள்ளி ரதம் நாட்டுக்கோட்டை நகரத்தார் தண்ணீர்மலைக் கோயிலையும் சென்றடைவது வழக்கம்.
வெள்ளி ரதம் சென்றதும் பின்னிரவில் தண்டாயுதபாணிக்கு முதல் பூசை நடைபெறும். பின்னர் இரண்டாம் பூசை, மகேஸ்வர பூசை எனப்படும். அது தைப்பூசத்தன்று நண்பகல் நேரத்தில் இடம்பெறும். மூன்றாம் பூசை, தைப்பூசத்திற்கு அடுத்த நாள் நண்பகல் நேரத்தில் நடைபெறும்.
பக்தர்கள், பால் குடங்களையும் பல விதமான காவடிகளையும் மலைக்கோயிலில் உள்ள தண்ணீர்மலை பால தண்டாயுதபாணிக்குச் செலுத்துகின்றனர்.
நான்காம் நாள் திங்கட்கிழமை மாலை சுமார் 6 மணிக்குத் தங்க ரதமும் இரவு 7 மணியளவில் வெள்ளி ரதமும் வாட்டர்ஃபால் வட்டாரத்திலிருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் பயணத்தைத் தொடங்கும்.
அடுத்த நாள் காலை, தங்க ரதம் குவீன் ஸ்திரீட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கும் வெள்ளி ரதம் கோயில் வீட்டுக்கும் சென்றுசேரும். அத்துடன் தைப்பூசத் திருவிழா இனிதே நிறைவுபெறும்.
பினாங்குத் தைப்பூசம், உள்ளூர்வாசிகளுக்கு உவகை தரும் வருடாந்தர வைபவம். இங்கு ஆயிரக் கணக்கில் குவியும் அயல்நாட்டவருக்கோ இது மறக்கமுடியாத ஆனந்த அனுபவம்.

