பலாங்கராயா: இந்தோனீசியாவின் போர்னியோவிலுள்ள பலாங்கராயாவில் அமைந்துள்ள தனது சிறிய வீட்டிலிருந்து சுதர்சனோ வெளியேற்றப்பட்டபோது, சுற்றிலும் அடர்ந்த, நெடி மிகுந்த மஞ்சள் நிறக் காட்டுத்தீப் புகை சூழ்ந்திருக்க, அவர் உயிர்வாயு உருளையிலிருந்து நடுங்கியவாறே மூச்சை இழுத்துக்கொண்டிருந்தார்.
மத்திய கலிமந்தான் மாகாணத்தில் உள்ள அந்த நகரின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளை நோக்கி நெருங்கி வந்த தீயை அணைக்க, சில நாள்களுக்கு முன்பு தமது மூன்று நண்பர்களுடன் சென்ற 57 வயதான இவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.
பல மாதங்களாக நீடிக்கும் காட்டுத்தீ, நச்சுப் புகைக் காற்றில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
“நான் முகக்கவசம், பாதுகாப்புக் கண்ணாடி என எல்லாவற்றையும் அணிந்திருந்தேன்.
“ஆனால், என்னைச் சுற்றிலும் புகை சூழ்ந்துகொண்டது. அதற்கு மேல் தாங்க முடியாமல் நான் வீட்டிற்குத் திரும்பிவிட்டேன்,” என்று கட்டுமான ஊழியரும் விவசாயியுமான இவர், கடந்த வாரம் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சுதர்சனோவின் வீட்டின் கொல்லைப்புறம் தீயில் கருகியிருந்தது. அங்கு சில மரக்கட்டைகளும் தாங்க முடியாத நெடி வீசும் புகையும் மட்டுமே எஞ்சியிருந்தன.
“இனிமேல் புகைமூட்டம் இருக்கக்கூடாது. தீயிலிருந்து மத்திய கலிமந்தான் விடுபட வேண்டும்.
“அப்போதுதான் மக்கள் பாதுகாப்பாக உணர முடியும். வேலை செய்து பிழைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என ஆம்புலன்ஸ் கதவுகள் மூடுவதற்கு முன்பு சுதர்சனோ கூறினார்.
பல மாதங்களாக நீடிக்கும் இந்தக் காட்டுத்தீ நெருக்கடியின் போது பலாங்கராயாவில் சுவாசத் தொற்றுக்காகச் சிகிச்சை பெற்ற 11,000க்கும் மேற்பட்ட மக்களில் இவரும் ஒருவர்.
இந்த நச்சுப் புகை அண்டை நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்தோனீசியச் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை ஏழு மாகாணங்களில் 300,000க்கும் மேற்பட்ட மக்கள் சுவாசக் குழாய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
