தோக்கியோ: ஜப்பானின் தலைநகர் தோக்கியோவில் புதிய தொடக்கத்தைக் குறிக்கும், ஆண்டின் வசந்தக் காலத்தின் உச்சத்தில் மலரும் ஜப்பானிய மொழியில் ‘சக்குரா’ என அழைக்கப்படும் செர்ரீ பூக்கள், பூத்து குலுங்கத் தொடங்கியுள்ளன.
அம்மரங்களின் பூக்களை உள்ளூர்வாசிகளும் சுற்றுப் பயணிகளும் வியந்து ரசித்தனர்.
“இங்கு இருப்பது மிகவும் அற்புதமாக உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட இது உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது. மேலும் இது எப்போதாவது நிகழும் குறுகிய காலத்திற்கு மட்டுமே இயற்கை நிகழ்த்தும் அறிய நிகழ்ச்சி,” எனப் பிலிப்பீன்சைச் சேர்ந்த சுற்றுப் பயணி திரு. கிறிஸ்டியன் சியோட்டிங் ஏஎஃப்பியிடம் கூறினார்.
நாட்டின் மிகவும் பிரபலமான “சோமேய் யோஷினோ” வகை செர்ரி பூக்கள் தோக்கியோவில் பூத்து குலுங்கத் தொடங்கி விட்டதாக மார்ச் 30ஆம் தேதி ஜப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.
2025ஆம் ஆண்டு அப்பூக்கள் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பூத்த போதிலும், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் ‘சக்குரா’ பூக்கள் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் தோராயமாக 1.2 நாள்களுக்கு முன்னதாகவே பூக்கும் என நிறுவனம் மேலும் கூறியது.