கோலாலம்பூர்: ஜனவரி 2ஆம் தேதி நிலவரப்படி மலேசியாவின் கிளந்தான், பேராக், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்கிறது.
பேராக் மாநிலத்தில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 307 பேர் தொடர்ந்து துயர்துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
பாகான் டத்தோவில் உள்ள பாசாங் அப்பியில் இருக்கும் பேராக் ஆற்றில் நீர் மட்டம் தொடர்ந்து அபாயகரமான நிலையில் இருப்பதாக பேராக் மாநில நீர் பாசன, வடிகால் துறை தெரிவித்தது.
கிளந்தானில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் துயர்துடைப்பு முகாம்களில் தங்கிவருவதாக அதிகாரிகள் கூறினர்.
அம்மாநிலத்தில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங் பகுதியில் உள்ள கோலோக் ஆற்றில் நீர் மட்டம் அபாயகரமான நிலையை எட்டியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேரை அம்மாநில அதிகாரிகள் இரண்டு துயர்துடைப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
பத்து பாகாட்டில் உள்ள பாரிட் பெலெமாமில் இருக்கும் ஆற்றில் நீர் மட்டம் அபாயகரமான நிலையை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பல மாநிலங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளபோதிலும் மலேசியாவின் எஸ்பிஎம் தேர்வுகள் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் தொடரும் என்று அந்நாட்டுக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திடீர் வெள்ளம் அல்லது மற்ற விவகாரங்கள் தொடர்பாகப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ கூறினார்.