கூலாய்: சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காருக்கு ஜோகூரில் மானிய விலையில் விற்கப்படும் பெட்ரோலை நிரப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மலேசியாவில் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அந்த நபர் சிங்கப்பூர் நிரந்தரவாசி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த காணொளிகள் பரவியதைத் தொடர்ந்து காரின் உரிமையாளர் சிங்கப்பூரில் அடையாளம் காணப்பட்டார் என்று கூலாய் காவல்துறைத் தலைவர் டான் செங் லீ தெரிவித்தார்.
அவருடன் தொடர்புகொண்டு கூலாய் காவல் நிலையத்துக்கு வந்து விசாரணையில் உதவுமாறு கேட்டுக் கொண்டோம் என்று அவர் ஜனவரி 4ஆம் தேதி கூறினார்.
சாலைப் போக்குவரத்து சட்டத்தின்கீழ் இவ்விவகாரம் விசாரிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
ஓட்டுநர், காரின் பதிவு எண்ணின் ஒரு பகுதியை மறைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
“காரின் பதிவு எண்களில் எந்தவித மாற்றமும் செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று பொதுமக்களை அறிவுறுத்துகிறோம். இது, சட்டத்திற்கு புறம்பானது,” என்று உதவி ஆணையர் டான் எச்சரித்தார்.
ஜனவரி 3ஆம் தேதி பதிவேற்றப்பட்ட காணொளி, ஒருவர், மானிய விலையில் விற்கப்படும் பெட்ரோலை நிரப்புவதைக் காட்டியது. காரின் பதிவு எண்ணில் ஒரு பகுதி மறைக்கப்பட்டிருந்ததையும் காணொளியில் காண முடிந்தது. மலேசியர்கள் மற்றும் உள்ளூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே மானிய விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது.
காணொளியைப் பதிவு செய்ததாக நம்பப்படும் அடையாளம் காணப்படாத நபர், சந்தேக நபரிடம் மலேசியரா எனக் கேட்பதும் பதிவாகியுள்ளது. அப்போது சந்தேக நபர் ஆமாம் என்று பதிலளிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரின் பதிவு எண்ணை சந்தேக நபர் மறைத்து இருந்ததாகக் கூறப்படுவதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

